headlines

img

ஆதித்யநாத் அரசின் அநீதி....

இந்தியா ஒரு வேளாண் நாடு. மத்தியில் ஆளும் மோடி அரசு அண்மையில் இந்திய வேளாண்மையை முற்றிலும் முடமாக்கும் வகையில் மூன்று புதிய சட்டங்களை கொண்டு வந்தது. அதன்மூலம் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெருநிறுவன கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடிமையாகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதை எதிர்த்தே பஞ்சாப், ஹரியானா, உ.பி., ம.பி., உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பயிர்க் கழிவுகளை எரித்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது உ.பி. மாநில பாஜக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது, அபராதம் விதித்துள்ளது, அபராதம் செலுத்தாதவர்களை சிறையிலும் அடைத்துள்ளது. ஆனால் கடந்த வெள்ளியன்று முதல்வர் ஆதித்யநாத் பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் என்று ஒப்புக்காக கூறியிருக்கிறார். ஆனால் அன்றைய தினமே தரியோன் பகுதி விவசாயிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பயிர்க்கழிவுகளை எரிப்பது ஒரு நீண்டகாலப் பிரச்சனை. அதனால்தான் தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் துன்பப்படுவதாக நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடை செய்வதாக சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக அதை உரமாக மாற்றுவதோ அல்லது வேறு வகையில் சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைத்து மறுசுழற்சி செய்வதோ அந்தந்த மாநில அரசாங்கங்களால் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் விவசாயிகள் மீதுநிகழ்த்தப்படும் கொடுமைகள் மட்டும் நிற்கவில்லை. 

தொழிற்சாலைக் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு சில சுத்திகரிப்பு முறைகள் கையாளப்படுவது போன்று விவசாய  பயிர்க்கழிவுகளுக்கும் அறிவியல் ரீதியான, மாசு குறைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து  செயல்படுத்திடுவதே பயிர்க்கழிவு எரிப்பை நிறுத்திடச் செய்யும். இல்லாவிடில் அத்தகைய நடவடிக்கைகள் பாரம்பரிய முறையிலான விவசாயிகளால் பின்பற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதனாலேயே அவர்களை பஞ்சமாபாதகங்பளை நிகழ்த்தியவர்களைப் போல வழக்குப்பதிவதோ, சிறையில் அடைப்பதோ முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.

உயிரைப் பறித்து உடலை எரித்து அராஜக செயலில் ஈடுபடுபவர்கள் மீது பாயாத ஆதித்யநாத் அரசு கழிவாகப் போகும் பயிர்க்கழிவை எரிக்கும் விவசாயிகள் மீது பாய்வது என்ன நியாயம். மாடுகள் மீது காட்டும் அக்கறை கூட மனிதர்களான விவசாயிகள் மீது காட்டப்படாததுகண்டிக்கத்தக்கது.விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கச்செய்வதையும் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கிடைக்கச் செய்வதையும் கவனத்தில் கொள்ளாத மத்திய-மாநில பாஜக அரசுகள் விவசாயிகள் மீது பாய்வது தவறான  நடவடிக்கையாகும். இது விவசாயத்தையும்  விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு எவ்வகையிலும் உதவாது. இது ஏற்கெனவே சிக்கலில் உள்ள விவசாயிகளை கைகொடுத்து மேலேற்றிவிடாமல் கீழே குழியில் தள்ளும் நடவடிக்கையாகும். 

;