headlines

img

சாக்குபோக்கு எடுபடாது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பலவீனப்பட்ட நிலை யில் எந்தஒரு  தேர்தலையும் சந்திக்க அக்கட்சி தயங்குகிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் மக்களவைத்தேர்தலை சந்தித்தது. சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. மக்களால் புறக்கணிக்கப் பட்ட கட்சியாக அது உள்ளதால் அடுத்தடுத்த தேர் தல்களில் தோல்வியடைந்து வருகிறது. இதனால் உள்ளாட்சித்தேர்தலை நடத்த தயங்குகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். முதலில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் எனக் கூறிய அவர் தற்போது டிசம்பர் மாதத்திற்கு வந்துள்ளார். அந்த மாதத்திலும் உறுதியாக நடை பெறுமா என்று தெரியவில்லை. 

கடந்த 3 ஆண்டுகளாக பல சாக்கு போக்கு களை சொல்லி மக்களின் அடிப்படை உரிமை யாக உள்ள உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து  தள்ளி  வைத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் ஒரு  மாநில நிர்வாகத்தின் நாடி நரம்புகள் போன்றவை. ஆனால் அடிப்படை ஜனநாயக உரிமையும், தன்னாட்சி உரிமையும் பறிக்கும் வகையில் இந்த அமைப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்தின் ஆணி வேராக திகழும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வகை யில் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்த அமைப்புகளுக்கு முறையாக தேர்தல் நடைபெற்றால் மட்டுமே மத்திய அரசின் நிதி தடையின்றி கிடைக்கும் எனக் கூறுகிறது. தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வந்த தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய நிதியை தரவில்லை.இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதி கள் தடைபட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளமே நொறுங்கிக்கிடக்கிறது. 

கழிவு நீர் பிரச்சனை, டெங்கு தடுப்பு நட வடிக்கைகளை கூட மேற்கொள்ள முடியாமல் பல உள்ளாட்சி அமைப்புகள் தத்தளிக்கின்றன. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிர மடைந்துள்ளது. மேலும் கழிவுநீர் அகற்றல், மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத அரசு சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தி மக்கள்மீது மேலும் மேலும் சுமையை ஏற்றி யுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மே மாதம்  மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை தயாரித்த அரசால் உள் ளாட்சித்  தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க தாமதம் ஆகிவிட்டதாக கூறுவது நியாயமான காரணமாக தெரியவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் வாக்காளர் பட்டி யலை  இறுதி செய்து குறித்த காலத்திற்குள் உள் ளாட்சித் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;