headlines

img

பஞ்சுக்குள் நெருப்பை பொத்தி வைக்கமுடியாது

கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சையையும், சந்தேகத்தையும் எழுப்புகிறது.

இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக விலை உயர்வை மேலும் அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் தான் வந்துகொண்டிருக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் பலன் நுகர்வோருக்கு கிடைத்துவிடாமல் மோடி அரசு பார்த்துக்கொள்கிறது. கலால் வரியை உயர்த்தி பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது என்றால், மாநில அதிமுக அரசு மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி எரி பொருள் விலை மேலும் உயர வழிவகுக்கிறது.

தற்போது பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகன ங்கள் தான் இயங்குகின்றன. உற்பத்தி முடங்கி யுள்ள நிலையில் சில தொழில்களுக்கும் விவ சாயப் பணிகளுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. கடும் சிரமத்திற்கிடையில் உயிர்மூச்சு விட முயலும் தொழில் மற்றும் விவசாயத்துறையை பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கடுமையாகப் பாதிக்கும். சரக்குப் போக்குவரத்திற்கான செலவையும் இந்த விலை உயர்வு மேலும் உயர்த்தும், இதன் மொத்தச் சுமையும் மக்கள் தலையில் தான் விடியும்.

இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ள நிலையிலும் டெண்டர் விடுவதில் அதிமுக அரசு  காட்டும் அவசரம் யாருக்காக என்ற கேள்வி யெழுகிறது. இதனால் பலன் பெறப்போவது ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களே ஆவர்.

பொதுவிநியோக முறையை சீர் செய்வதில் காட்டாத அவசரத்தை டெண்டர் விடுவதில் அதிமுக அரசு காட்டுவது ஏன்; இதனால் மக்க ளுக்கு என்ன லாபம் என்ற கேள்விக்கு முறை யான பதிலில்லை.

பொது சுகாதாரத்துறை முனைப்பாக செயல்படவேண்டிய இந்தத் தருணத்தில் முறைகேடு காரணமாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட செல்வவிநாயகம் என்பவர் பொது சுகாதாரத்துறையின் இயக்குநராக நியமிக்கப் பட்டிருப்பதன் மர்மம் என்ன? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டவர் இவர்; ரேபிட் டெஸ்ட் கொள்முதலிலும் அவப்பெயரை சம்பாதித்த இவர் முக்கியமான பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது ஏன்?

இது ஒருபுறமிருக்க பாரத் நெட் திட்ட டெண்டரில் ரூ.1,815 கோடி முறைகேடு நடந்திருப்ப தாக வெளியாகியுள்ள தகவலும் அதிர்ச்சி யளிக்கிறது. பாரத் நெட் நிறுவனம் தொடர்புடைய டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெண்டர் விதிமுறை மீறல்கள் எதுவும் நடை பெறவில்லை என்று மாநில தகவல் தொழில்நுட்ப த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், வெளிவந்து கொண்டிருக்கும் விவரங்கள் நேர்மாறாக உள்ளன.

இந்த கெடூரமான காலத்திலும் கூட அதிமுக அரசு தன்னுடைய வழக்கமான பாணியிலேயே செயல்பட்டு வருகிறது. கமிஷன், கலெக்சன் என்பதே இவர்களது குறிக்கோளாக உள்ளது. தற்போது உள்ள நிலைமையை பயன்படுத்தி இதை மூடி மறைக்க முயலலாம். ஆனால் அது பஞ்சுக்குள் நெருப்பை பொத்தி வைத்த கதையாகவே முடியும்.

;