headlines

img

முதுகெலும்பை முறிக்கலாமா?

சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை, புதிய அரசாணை வெளியிட்டு செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சாலைக்காக, சுமார் 7500 ஏக்கர்சாகுபடி நிலங்களும், வனத்துறை காப்புக்காடு நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.அத்துடன் குடிநீர், விவசாயப் பாசன நீராதாரங்கள், கிராமங்கள் அழிவைச் சந்திக்கும் என்பதால் இத்திட்டத்துக்கு எதிராக கிராமப்புற விவசாயிகள் பல கட்ட தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் காவல்துறை மூலம் மிரட்டிகைது செய்வது, பொய் வழக்குப் போட்டு சிறையில்அடைப்பது ஆகியவற்றின் மூலம் கட்டாய நிலப்பறிப்பு செய்யப்பட்டது.இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் சுற்றுச் சூழல் மற்றும்வனத்துறை அனுமதி பெறாமல் நிலங்களைகையகப்படுத்தும் ஆணை வெளியிட்டது தவறுஎன சுட்டிக்காட்டி, அந்த அரசாணையைநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வசமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலைஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் டிசம்பர் 8ஆம் தேதிதீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்சத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய அரசாணையை ரத்து செய்யவும், கையகப்படுத்திய நிலத்தை உடமையாளர்கள் பெயரில் மாற்றித் தரவும் உத்தரவிட்டது. ஆனால்அதற்கு ஒரு படி மேலே போய், நிலங்களை கையகப்படுத்துவதற்கு உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி எட்டுவழிச் சாலை அமைக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் முன்வைத்த பல வாதங்களை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக,ஏற்கனவே மூன்று சாலைகள் இருக்கும் போது நான்காவது சாலை அவசியமில்லை, விவசாய நிலங்கள், நீராதாரங்கள், காடுகள், பாசனக் கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தீர்ப்பில்இடம்பெறவில்லை.இதற்கு மாறாக, தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய பொருளாதாரத்தின் “ரத்த நாளங்கள்” என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இந்தியாவின்“முதுகெலும்பான” விவசாயிகள் வாழ்வைப் பற்றிஎதும் கூறாதது வியப்பளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பற்றிய அடிப்படையான இரு முரண்பட்டகண்ணோட்டங்களில் - தாராளமயக் கொள்கைகளா, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளா என்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த பக்கம் இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

ஆயினும் மக்கள் நலனில் உண்மையானஅக்கறை இருக்குமானால் மத்திய, மாநில அரசுகள் எட்டுவழிச் சாலை திட்டத்தை தொடராமல் கைவிடுவதே பொருத்தமாக இருக்கும். அத்துடன், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அவசியமற்ற செலவைத் தவிர்ப்பது அறிவார்ந்த செயலாகவும் இருக்கும்.

;