headlines

img

நீங்கள் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும்...

உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமைநீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச்செய்திருக்கிறது. மேற்படி ஊழியர் தன் முறையீட்டின் நகலை உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்துஇந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இது இந்த விவகாரத்தில் மிகவும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இதர உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரானத் தடைச்சட்டத்தின் வரம்புக்குள் வராததன் காரணமாக, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ‘நீதிபதிகளுக்குள் ஒரு குழு’(‘In-house committee’)  அமைக்கப்பட்டது. இத்தகைய குழுவின் விதிகள், மேற்கண்டவாறு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தடைச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவைகளாகும். மற்ற பல சட்டங்களில் மாற்றங்கள்கொண்டுவந்ததைப்போல் இதிலும் காலத்திற்கேற்றவிதத்தில், பணியிடங்களில் பெண்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், பொருத்தமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க முடியும்.துரதிர்ஷ்டவசமாக, இது செய்யப்படவில்லை. முறையிட்டவருக்கு உதவிடும் விதத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சாத்தியமானவற்றைச் செய்வதற்குப் பதிலாக, மேற்படி குழுவில் வெளியார் எவரும் நியமனம் செய்யப்படவில்லை. முறையிடுபவர் தனக்கு ‘ஆதரவாளர்’ எவரையும்அமர்த்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

விசாரணை, மறு தரப்பில்லா (நஒயீயசவந) விதமாகவே தொடர்ந்தது. இதுபோன்ற விசாரணைகளை நீதிமன்றங்கள்ஆட்சேபகரமானவை என்றும் நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பல தீர்வறிக்கைகள் மூலம் உயர்த்திப்பிடித்திருக்கின்றன. விசாரணை தொடங்கிய நான்காவது நாளிலேயே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டதாக (நஒடிநேசயவநன) பிரகடனம் செய்யப்பட்டார். எனினும், முறையிடுபவர், குழுவின் அறிக்கையின் நகல் கூட வழங்கப்படுவதற்கு மறுக்கப்பட்டார். இவ்வாறு இதன்மீதான நடைமுறையானது உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதியின் மதிப்பை மேலும் மங்கச் செய்திருக்கிறது. நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் மூத்த வழக்கறிஞர்கள், நடுவர்கள், பெண் சமூக ஆர்வலர்கள் மற்றும் குடிமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. கடைசிப் புகலிடமாக அவர்கள் உச்சநீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இது கடுமையாக உலுக்கியிருக்கிறது.

தற்போது பணியிலிருக்கும் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் முன்மொழிந்த கருத்துக்களை விசாரணைக்குழுவினர் செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக் குழுவின் தலைவரான நீதியரசர் பாப்தேவிற்கு, அவர் எழுதியிருந்த கடிதத்தில், முறையிடுபவர் கூறியுள்ள குறைகளைக் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை பரிந்துரைத்திருந்தார். குழுவில் வெளியார் ஒருவரை நியமனம்செய்திட வேண்டும் என்றும், முறையிடுபவருக்கு உதவிட வழக்குரைஞர் வைத்துக்கொள்ள அனுமதித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இவ்வழக்கை ஒரு பக்கமாக மறு தரப்பிலா (நஒ யீயசவந)விதமாக தொடர்வதற்கு எதிராகவும் எச்சரித்திருந்தார். தற்போதைய தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதியான ஜே.எஸ். வர்மா இது தொடர்பாகக் கூறியிருப்பதை, நினைவுகூர்ந்திட வேண்டும். அவர் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் எவ்வளவுதான் உயரத்திலிருந்தாலும், சட்டத்திற்கு மேலாக நீங்கள் கிடையாது.”


(மே 8, 2019) 

தமிழில்: ச.வீரமணி

;