headlines

img

எல்லை மீற வேண்டாம்

இந்திய அரசமைப்பு முறையில் பாதுகாப்பு படைக்கென்று மரபுரீதியாக சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுள்ள ராணுவம் அரசியல் நடவ டிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதேநேரத்தில் தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்க ளுக்கு ராணுவத்தை பயன்படுத்தவும் கூடாது. அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தை யும் சீர்குலைத்து வரும் மோடி அரசு ராணுவத்தி லும் தன்னுடைய ஊடுருவலை செய்து வருவ தற்கு சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் உதாரண மாக அமைந்துள்ளன. இது கவலையளிக்கத்தக்க ஒன்றாகும்.

ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது மிகச் சிறந்த நடவடிக்கை என்று ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே கூறியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் மேற்கே உள்ள அண்டை நாடு மற்றும் அதன் ஆதரவா ளர்களின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்றும், இந்தியாவுடன் ஜம்மு, காஷ்மீர் முழு மையாக இணைக்கப்பட்டது என்றும், நரவானே கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற 72ஆவது ராணுவ தின விழாவில் பேசும் போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சு முற்றிலும் வரம்பு மீறியது, கண்டிக்கத்தக்கது. மோடி அரசின் கவனம் தன்பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஆளும் கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டிருக்கும். ஆனால் பாதுகாப்புப் படை என்பது நிரந்தரமான ஒன்று. ஆட்சியாளர்கள் விரும்பும் வகையில் ராணுவத்திற்கு பொறுப்பானவர்கள் பேசுவது என்பது ஆபத்தானது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் வகையில் அமைந்த 370ஆவது பிரிவு ரத்து மற்றும் அந்த மாநிலத்தை துண்டாடி யது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றும் வகையில் மோடி அரசால் செய்யப் பட்ட ஒன்றாகும். இது குறித்து ஏராளமான சர்ச்சைகள் உள்ளன.

மோடி அரசின் இந்த நடவடிக்கையால் ஜம்மு- காஷ்மீரில் அமைதி முற்றாகச் சீர் குலைந்துள்ளது. மக்கள் கடும் துயருக்கு ஆளாகி யுள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கையை ராணு வத் தளபதி பாராட்டுவது என்பது மோடி அரசுக்கு முட்டுக் கொடுப்பது ஆகும். ராணுவத் தளபதியின் வேலை இது அல்ல. இதற்கு முன்பு ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் தற்போது முப்படைகளின் தளபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நிலையில், முப்படை தளபதியாக அவர் நிய மிக்கப்பட்டார். இதே பாணியில் தற்போது ராணுவத் தளபதியும் பேசுவது மோடி அரசின் பார்வையை தன் பக்கம் திருப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் ராணுவத் தளபதிகளின் வேலையேயன்றி மோடி அரசின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்படுவது அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

;