headlines

img

‘நமது போராட்டம்’

 “எனக்கு மூச்சுத் திணறுகிறது” என்ற அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் மரண ஓலம், “உனது வேதனை எனது வேதனை; உனது போராட்டம் எனது போராட்டம்” என்ற ஆவேச மிக்க பேரெழுச்சி முழக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த முழக்கத்தை விண்ணதிர எழுப்பி அமெ ரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஜூன் மாதம் முதல் வார இறுதியில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடந்துள்ளன. ஜார்ஜ் பிளாய்டு, அமெரிக்க வெள்ளை நிறவெறி காவல் அதிகாரி யால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது முதல் கடந்த 12 நாட்களாக, கறுப்பினத்தவர் மட்டுமின்றி வெள்ளையின மக் களும், பிற சமூகங்களைச் சேர்ந்த மக்களும், குறிப்பாக, இளைய தலைமுறையினர் ஆயிரமா யிரமாய் அமெரிக்காவின் 584 மாநகரங்களிலும் போராட்டக் களத்தில் குவிந்திருக்கிறார்கள்.

கொரோனா காலத்தின் போதும், அதற்கு முன்புமாக அமெரிக்காவிலும், பிற அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களின் கிரிமினல் தனமான தாக்குதல்கள் உலக உழைக்கும் வர்க்கத்தை நிலைகுலைய செய்து வருகிறது; முத லாளித்துவ லாப வெறியும், நெருக்கடிகளை தீர்க்க முடியாத இயலாமையும் உலகெங்கிலும் கோடான கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை, உரிமைகளை, ஊதியத்தை, ஓய்வூதியத்தை, கூட்டுப் பேர உரிமையை - என ஒவ்வொன்றையும் பறித்து வருகிறது; மறுபுறம், உலகமே கொரோனா துயரில் ஆழ்ந்துள்ள போதிலும், பெரும் கார்ப் பரேட்டுகளும், மகா கோடீஸ்வரர்களும் மட்டும் பல மடங்கு மூலதனத்தை குவிக்க முடிந்திருக்கிறது. இதற்கு எதிராக, மக்கள் மனங்களில் கனன்று கொண்டிருந்த கோபாவேசம்தான், ஜார்ஜ் பிளாய்டு படுகொலை என்ற தீப்பொறி பட்டதும் பேரெழுச்சி யாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

இதற்கு முன்பு, 2008 பொருளாதார நெருக்கடி துவங்கிய பிறகு, வால்ஸ்டிரீட் போராட்டம் உள்பட பல நாடுகளில் எழுச்சிகள் எழுந்தன. எனி னும் அவை, காலப்போக்கில் வடிந்து போயின. தற்போது எழுந்துள்ள எழுச்சிப் பேரலை, முத லாளித்துவத்தின் கொடூர தாக்குதல்கள், வேலைப் பறிப்புகள், சுகாதார நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாக்க திராணியற்ற முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, அதை திசை திருப்ப நிறவெறி, இனவெறிரீதியிலான தாக்குதல்கள் - என அனைத்தும் ஒருசேர குவிந்து, பெருவாரியான மக்களின் உணர்வலைகளை கோபாவேச அலை களாக மாற்றியுள்ளன. இது, ஜார்ஜ் பிளாய்டு படு கொலைக்கு மட்டும் நீதி கேட்கிற போராட்டமாக அல்ல; முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் இழப்புகளுக்கு நீதி கேட்கிற போராட்டமாக மலரும் வாய்ப்பினை அதிகரித்துள்ள போராட்டம்.

மனிதகுலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் காணாத அளவில் முதலாளித்துவத்திற்கு எதிராக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுமக்கள் போராட்டங்கள் நாம் வாழும் இந்த காலத்தில்தான் அதிகரித்துள்ளன; இப்போராட்டங்கள் பெரிய கால இடைவெளியின்றி அடுத்தடுத்து தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன; ஒரு போராட்டத்திற்கும் அடுத்த போராட்டத்திற்கும் இடையில் அதில் மக்கள் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது; போராட்டத்தின் இலக்கு களும் குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்கு மட்டுமானதாக இல்லாமல் ஒட்டுமொத்த  முதலாளித்துவத்திற்கு எதிரானதாக கூர்மையடையட்டும்.

;