ஆர்எஸ்எஸ் தலைவரின் அப்பட்டமான பொய்
கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்டு, அறிவியல் பூர்வமாக தமிழ்நாட்டின் தொன்மையை நிரூ பிக்கும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. ‘இன்னமும் தரவுகள் தேவை’ என்று வைகை நதிக்கரை வரலாற்றை பின்னுக்கு இழுக்க முயல்கிறது ஒன்றிய அகழாய்வுத்துறை.
‘கீழடியில் ஒன்றும் இல்லை’ என்று சொல்லி மண்ணள்ளிப் போட்டுவிட்டு போன ஸ்ரீராமன் என்பவரை ஓய்வுபெற்ற பிறகும் அழைத்து வந்து ‘ஒன்றுமில்லை’ என்பதை எழுதித் தருமாறு கேட்டுக் கொள்கிறது ஒன்றிய அரசு. மாறாக, உண்மைக்கு மாறான அறிக்கையை தரமாட்டேன் என்று சொல்லும் அமர்நாத் ராமகிருஷ்ணனை தொடர்ந்து பழிவாங்குகிறது.
மறுபுறத்தில் சமஸ்கிருத மொழி குறித்த கட்டுக் கதைகளை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். உழைக்கும் மக்க ளின் வாழ்வியலிலிருந்து தள்ளி வைக்கப்பட்ட தால் தனிமைப்பட்டு சுருங்கிப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்டப் போவதாக சொல்லி பல்லாயிரம் கோடியை அள்ளித் தருகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு கிள்ளிக்கூட தருவதில்லை.
‘சமஸ்கிருத மொழி இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும் அது மேலும் வளர வேண்டுமென்றால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத மொழியை பயன்படுத்த வேண்டும், மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும்’ என்றெல்லாம் தன்னுடைய ஆகாத ஆசையைக் கூறி போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.
முதலில் சமஸ்கிருதம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பது கலப்படம் இல்லாத பொய்யாகும். குறிப்பாக, தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழ்மொழி காலத்தால் முந்தையது என்றும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வடமொழி சொற்கள் இருக்கலாம். அதேபோல வடமொழி யிலும் பல்வேறு மொழிகளின் சொற்கள் உள்ளன. இதனால் சமஸ்கிருத மொழிதான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்பது அப்பட்ட மான பொய் என்பது மட்டுமல்ல, மொழிகளின் வரலாற்றை அதிகாரத்தின் வாள் கொண்டு எழுத முனையும் அக்கிரமமாகும்.
‘சமஸ்கிருத மொழி தேவபாஷை’ என்று பட்டம் கட்டப்பட்டு பெரும்பகுதி மக்கள் பேசுவ திலிருந்து தடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் உலகிலேயே பெண்கள் பேசக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. எனவே தான் இந்த மொழி யாருக்குமே ‘தாய்மொழி’யாக இருக்க முடியாது என்று அறி ஞர்கள் கூறுகின்றனர். வழக்குமொழி ஆவதி லிருந்து அந்த மொழியை தடுத்த கருத்தியல்தான் இன்றைக்கு அதை வாழ்க்கை மொழி ஆக்குமாறு கதறுகிறது. சமஸ்கிருதம் மீதான சாதியம் அகற்றப் படாவிட்டால் அந்த மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.