headlines

img

வளர்ந்த நாடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கும் கேரள மாடல்

வளர்ந்த நாடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கும் கேரள மாடல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு தருவதில் வளர்ந்த நாடுகளுக்கு இலக்கு நிர்ண யிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

சமீபத்தில் வெளியான மாதிரி பதிவு முறை புள்ளிவிவர அறிக்கை-2023  (sample registration system statistical report-2023) இன் படி,  பிறந்து 1 வயதுக்குள் இறக்கும் குழந்தை இறப்பு விகிதத்தை 1000 க்கு 5 என்ற அளவுக்கு கேரள அரசு குறைத்துள்ளது. 

இது சாதாரண விஷயம் அல்ல. மிகப்பெரும் சாதனையாகும். ஏனென்றால் இந்திய  அரசாங்கத்தாலோ, ஏன் உலகிற்கே நான் தான் எஜமானன் என ஆதிக்கம் செலுத்த  முயலும் அமெரிக்காவாலோ கூட இதனைச் சாதிக்க முடிவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவில் கணக்கின் படி  குழந்தை இறப்பு விகிதமானது 1000 க்கு 25 என்ற அளவிலும் அமெரிக்காவில் 1000 க்கு 5.6 என்ற அளவிலும் உள்ளது.

அதே போல ‘நியோ நேட்டல் டெத்’ எனப்படும் - பிறந்த 28 நாட்களுக்குள் இறக்கும் குழந்தை களின் எண்ணிக்கையும் 1000 க்கு 4 என்ற அளவில் கேரளத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இது, இந்திய அளவில் சராசரியாக  1000 க்கு 18 என்ற நிலையில் உள்ளது.

பொதுவாகவே குழந்தை இறப்பு விகிதமானது  பிரசவகால சிகிச்சை, மருத்துவ சேவைகள்,  பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு போன்றவற்றில் மட்டுமே அடங்கியதல்ல; அது ஒரு தனிக் குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியையும் மற்றும் சமூக-பொருளாதார காரணிகளையும் சார்ந்தது.

உதாரணமாக, ஒரு சமூகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படையான  பணியே குடிமக்கள் அனைவருக்கும் சமமான மற்றும் இலவச அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதேபோல சுகாதார பாதுகாப்பிற்கு தடுப்பூசி போடுவதை பரவலாக உறுதி செய்ய வேண்டும். போதுமான ஊட்டச்சத்துள்ள உணவு களை மக்கள் உண்ண வேண்டும். ஒவ்வொரு குடி மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வசதியை உறுதிசெய்வது உட்பட அரசு பொறுப்பேற்று செயல்படவேண்டும். அதற்கு அவர்களது அத்தியாவசிய  வாழ்க்கைக்கான ஊதியத்தை உறுதி செய்வது, குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; அத்தோடு பெண்களின் கல்வி நிலையையும் மேம்படுத்த வேண்டும். இவை சமூக பொருளா தார வளர்ச்சியின் மிக முக்கிய அடிப்படைகளாகும்.

இவற்றை பல ஆண்டுகளுக்கு முறையாக செயல்படுத்தும் போதுதான் மேலே குறிப்பிட்ட குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைக்க முடியும். அதைத்தான் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் செய்துள்ளது.

குடிமக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பில் வளர்ந்த நாடுகளுக்கே இலக்கு நிர்ணயிக்கும் இடத்திற்கு சென்றுள்ளது கேரள அரசு. இதுவே  நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டிய மாடல்.