headlines

img

நாணயமற்றவர்கள்

நாணயமற்றவர்கள்

பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் நாணயம் என்பது கொஞ்சம் கூட இல்லாத மத வெறி அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டையொட்டி நூறு ரூபாய் நாணயம் ஒன்றை வெளியிட்டு பாராட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பைப் பற்றி வெகுவாகப் புகழ்ந் துரைத்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பை அவர் பாராட்டினார். இது பெரும் சர்ச்சையை உரு வாக்கியது. இந்த  வேலையை அவர் தொடர்ந்து கூச்சமின்றி செய்து வருகிறார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆர் எஸ்எஸ் வலுவாகப் போரிட்டது என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆங்கிலேய அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலமுறை எழுதிய கடிதங்களே பிரதமரின் கூற்றை மறுதலிக்கும்.  இன்னும் சொல்லப்போனால் அனைத்துப் பகுதி மக்களும் விடுதலைக்காக இணைந்து போராடிய நிலையில்,  ஆர்எஸ்எஸ் விதைத்த  பிளவுவாத, பிரிவினை வாதச் சிந்தனைகள் ஒன்றுபட்ட விடுதலைப் போ ராட்டத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி யது என்பதுதான் உண்மை.

ஒவ்வொரு ஸ்வயம் சேவகரும் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பின் மீது ஆழ்ந்த நம் பிக்கை வைத்திருக்கின்றனர் என்றும், பிரதமர் கூறுகிறார். இதுவும் உண்மையல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவீன, ஜனநாயக, மதச்சார்பற்ற, கூட்டா ட்சித் தன்மைகொண்ட இந்தியாவையோ, அதன் அரசமைப்புச் சட்டத்தையோ ஒருபோதும் ஏற்ற தில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் இந்தியாவின் தேசியக் கொடியைக் கூட அவர்கள் பல ஆண்டு கள் ஏற்றியதில்லை. 

இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடந்தபோது, மனுஅநீதியின் அடிப் படையில்தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று அடம்பிடித்த வர்கள்தான் இவர்கள். இதையெல்லாம் வரலாறு அழுத்தமாகப் பதிந்து வைத்துள்ளது. ஆனால் அதிகாரத்தைக் கொண்டு இதையெல்லாம் மறைத்துவிட முடியும் என்று பிரதமர் மோடி நம்பு கிறார் போலும்.

இப்போது உள்ள அரசமைப்புச் சட்டத்தை மாற்ற முயன்று தோற்றதால் கொஞ்சம் கொஞ்ச மாக அதன் சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற் கான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் கட்டளையின்படி செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ் என்பது ஒரு வெளிப்படையான, ஜனநாயகத் தன்மைகொண்ட அமைப்பு அல்ல. பாசிசத் தன்மை கொண்ட மர்ம மாளிகை அது. அதன் வேரை விசாரித்தால் அது சாதிய மேலா திக்கத்தை நிலைநிறுத்துவதையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரசேவை செய்வதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பதை அறிய முடியும். ஆர்எஸ்எஸ் வரலாறு என்பது கருப்புப் பக்கங்களை மட்டுமே கொண்டது. அதை ஒருபோ தும் வெள்ளையடித்து மறைக்க முடியாது.