headlines

img

‘சக்தி’ வடிவத்தின் சக்தியை உறிஞ்சுவதா?  

பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய அவர், பெண்கள்பாதுகாப்பு குறித்து அரசு கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

உ.பி. மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தஇளம்பெண் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூர நிகழ்வினை பாஜகதலைமையிலான உ.பி.மாநில அரசு எந்தளவுக்கு மோசமாக கையாண்டது என்பதைக் கண்டுஉலகமே அதிர்ச்சியடைந்தது. அந்த பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுகூட மறுக்கப்பட்ட கொடுமை நடந்தது. அந்த பெண் உயிரிழந்த நிலையில் இரவோடுஇரவாக உ.பி. மாநில போலீசாரால், அவரது பெற்றோரை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு சலடத்தை எரித்த கொடூரமும் நடந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டின் முன்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்த அவமானகரமான நிகழ்வுகள் அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருந்தது. நாட்டின்பிரதமர் இந்த அக்கிரமத்தை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. இதுதான் அவர்பெண்களை மதிக்கும் லட்சணமா? 

காஷ்மீரில் பிஞ்சுக் குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் பாஜகவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினர். பெண்கள் சக்தியின் வடிவம் என்றுஇப்போது பேசும் பிரதமர் மோடி நாட்டின்பல்வேறு பகுதிகளில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடூரங்களின் போது பெரும்பாலும் மவுன சாட்சியாகவே இருந்தார்.பெண்களின் பாதுகாப்பை வெறும் வாய்ப்பந்தல் மட்டுமே உறுதி செய்துவிடாது.

இதுஒருபுறமிருக்க, பெண்களுக்கு அதிகாரம் வழங்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடிகூறுவதிலாவது உண்மை உண்டா? எத்தனையோ மக்கள் விரோத சட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றும் மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டது உண்டா?அந்த மசோதா பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் விதம் இதுதானா? பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அடிப்படையிலேயே பெண்களை சமத்துவமாக கருதாத ஒன்றாகும். மோடி அரசின்கண்ணோட்டமும் இதுபோலத்தான் உள்ளது. பெண்கள் சக்தியின் வடிவம் என்கிறார் பிரதமர். ஆனால் பெண்களின் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுகிறது இந்த அரசு.
 

;