உலகில் காற்று மாசுபட்ட முதல் 15 நகரங்களில் தலைநகர் தில்லி உள்ளிட்ட 14 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கிறது என்று கடந்தாண்டு உலக சுகாதார நிறுவனம் அறி வித்தது. இந்த நச்சுக்காற்று இந்தியர்களின் சராசரி ஆயுட்காலத்தை 4 ஆண்டுகள் குறைத்திருக்கிறது என்கின்றன புள்ளிவிபரங்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வேலையில் மோடி அரசு இறங்கியிருக்கிறது.
தொழில்வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் விதிகள் தடையாக இருக்கிறது; அதனால்தான் இந்தியா வில் தொழில் வளர்ச்சியடையவில்லை என பாஜக கூறி வந்தது. 2014ல் மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை நாசப்படுத்த அனுமதி அளித்தது. 2014 முதல் 2017 வரை மட்டும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில் பிரிவுகளில் இருந்த 70 சதவிகித தொழில்களுக்கான சுற்றுச்சூழல் விதிகள் நீர்த்துப்போக செய்யப்பட்டிருக்கிறது. அதனால் உண்மையிலேயே தொழில் வளர்ச்சியடைந்திருக்கிறதா; வெளிநாட்டு மூலதனங்கள் வந்து குவிந்துவிட்டனவா என்றால் இல்லை.
குறிப்பாக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் பட்டியலில் 206 வகை தொழில்கள் மாசுபடுத்தும் பட்டியலில் இருந்தன. மோடி அரசு அந்த 206ல் இருந்து 146 வகை தொழில்களுக்கு சுற்றுச்சூழல் ஆய்வுகளில் இருந்து விலக்கு அளித்தது. விலக்கு அளிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் சுயமாக சுற்றுச்சூழல் தணிக்கை செய்து கொள்ளலாம்; அல்லது அரசு அல்லாத மூன்றாம் தரப்பினரை கொண்டு தணிக்கை செய்து கொள்ளலாம் என அறிவித்தது. அதாவது குறுகிய இடைவெளியில் அதிக மாசு படுத்தும் தொழில்கள் (சிவப்பு), நடுத்தர ஆபத்து (ஆரஞ்சு), நீண்ட இடைவெளியில் மற்றும் குறைந்த இடைவெளியில் குறைந்த மாசு படுத்துவன (பச்சை) என்று ஆய்வு அடிப்படை யில் வகைப்படுத்தப்படுகிறது. இதனை நேரடி யாக சிவப்பில் இருந்து பச்சைக்கு மாற்றும் அள விற்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதா வது மோடி அரசு ஆட்டு மந்தைக்கு காவலாக ஓநாயை நியமிக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் எல்லாம் சுற்றுச்சூழலில் அக்கறையுடன் இருந்திருந்தால் எதற்காக புகை கொண்டு இயற்கைக்கு எதிரான பகை வளர்கிறது? கடலின் மட்டம் உயர்ந்து கரைகள் மறைகிறது? காற்று மாசுபடிந்து ஓசோன் படலம் ஓட்டையாகிறது? இராசயன கழிவுகள் ஆறு களாக ஓடுகிறது? தனியார் கார்ப்பரேட் என்றாலே பெரும்பகுதி சுயநல நாற்றம்தானே அடிக்கிறது. இதில் எங்கே இயற்கை வாசம் வீசும்?! இயற்கையின் சீரழிவு, சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்க அதிகரிக்க இப்பூவுலகின் எதிர்காலம் சுருங்கும் என்பதுதான் இயற்கையின் விதி. இயற்கையை மரணிக்க வைக்கும் நாசகர முயற்சிகளை மோடி அரசு கைவிட வேண்டும். இயற்கைக்கு மதவேற்றுமை கிடையாது.