headlines

img

பழுது - ஜனநேசன்

அந்த  பெருநகரத்தின்  பிரபல  தனியார் சிறப்பு பன்நோய் மருத்துவமனை;  சிறப்பு சிகிச்சை தனிஅறை எண் எட்டில் சிவஞானம் சுப்பிரமணியம் தங்கி  சிகிச்சை பெற்று வருகிறார். அந்த அறைக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் இரண்டாம் நிலை மருத்துவர்கள் சற்று தயங்கி தமது மனநிலையை சமன்செய்து கொண்டு தான் உள் நுழைவார்கள். நோயாளி சிவஞானம் சுப்பிரமணியம் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்ல வேண்டும். சிறு வார்த்தை நா நழுவி சொன்னாலும் அதை வைத்து சுப்பிரமணியம் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லுவதற்குள் பத்து பிற ‌உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விடலாம்.இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும்  இரண்டாம் நிலை மருத்துவர்கள்  அவரிடம் கவனமாக மிகப் பதனமாகப் பேசுவார்கள்.  இப்படித்தான் நேற்று இரவு  சுப்பிரமணியத்தை  சோதித்த  சிறுநீரக சிறப்பு இரண்டாம் நிலை மருத்துவர்  மகேஷ்குமார்   “அய்யா கடைசிபட்ச மருந்து கொடுத்தும் உங்கள் ‌நோய் கட்டுப்படவில்லை. இனி ‌டயலிஸ் பண்ணினாலும் உங்கள் மாற்று சிறுநீரகம் ஏற்றுக் கொள்ளுமா என்று சோதித்துப் பார்த்து தான் மேற்கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். இருந்தாலும் இந்த மாத்திரைகளை சாப்பிடுங்கள். கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்” சுப்பிரமணியம் உலர்ந்த உதட்டை நாக்கால்  ஈரப்படுத்தியபடி  கேலிசிரிப்பை படரவிட்டு, “கடைசி பட்ச மருந்து என்றால் எனக்கு கடைசி பட்ச மருந்தா? இல்லை இந்த‌ சிகிச்சைக்கு  கடைசி பட்ச மருந்தா? மருத்துவ அறிவு அவ்வளவு சுருங்கிருச்சா?’’ மருத்துவர் ‌ வெலவெலத்துப் போனார். கர்சீப்பால் வியர்வையை  ஒத்திக் கொண்டு, “அய்யா, உங்களுக்கு கடைசி மருந்தென்று சொல்ல வில்லை. நீங்கள் நல்லாவே இருப்பீங்க! உங்க நோய்நிலைக்கு‌ உச்சபட்ச மருந்து கொடுத்தாகிவிட்டது. இனி உங்கள் மாற்று சிறுநீரகம் ஏற்கத்தக்க மருத்துவமுறையை  நாட வேண்டும்! தலைமை மருத்துவர் ஒரு கான்ப்ரன்ஸ்க்காக லண்டன் போயிருக்கிறார்.அவர்‌ வந்ததும் கலந்து பேசிதான் அடுத்த கட்ட சிகிச்சை பற்றி சொல்ல‌முடியும். நீங்க  தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ்” சொல்லி  வெளியேறி ‌தப்பினார்.

சுப்பிரமணியம் வெறும் பள்ளி இறுதி வகுப்பு படித்து போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தேவையான அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் கழிக்க வேண்டிய சமயத்தில் கழிக்காமலும் அடக்கி வைத்து தொலைதூர வண்டி ஓட்டியவர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவரது அக்கா தானமாக அளித்த இடப்பக்க சிறுநீரக பலத்தில் உயிர்நீட்டிப்பில் உள்ளார். அவர் தொழிற் சங்க‌ பொறுப்பில் இருந்தவர் என்பதால் எதையும் ஏன் எதற்கு என்று கேட்டு திருப்தி ஏற்பட்டால் தான் ஏற்பார்.அவருக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அந்த மருந்தின் கூட்டுப்பொருள்கள் என்னென்ன, அதை சாப்பிட்டா, பக்க விளைவை எதிர்கொள்ள வேறு என்னென்ன மருந்துகள் சாப்பிடவேண்டும்? அவற்றின் கூட்டுப்‌பொருள்கள் என்ன?. இப்படி எல்லாம் கேட்டு தெளிந்த பின் தான் மருத்துவரை விடுவிப்பார். இதெல்லாம் நோயாளி கேட்கவும்‌, மருத்துவர்‌ விளக்கவும் கடமைப் பட்டவர்கள் என்று மருத்துவ அறம்  வலியுறுத்தினாலும், யாருக்கு நேரமிருக்கிறது  என்று செயற்கை அவசர இறக்கையைக் கட்டிக் கொண்டு  பரபரவென்று பறக்கிறார்கள்.  

                                                                                               கடந்த முறை சுப்பிரமணியத்தை  இரண்டாவது மருத்துவமனையில் சேர்க்கும் போது  எட்டாம் எண் அறை தான் இருக்கிறது. வேறு அறை  நாளைதான் காலியாகும். அதுவரை ஐசி யூனிட் டிலிலே இருக்கிறீர்களா என்று நிர்வாகத் தரப்பில் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு அவர் ஐசியூனிட்டில் இருந்தால் அவரது பேச்சு தொல்லை இருக்காது. தீவிரக் கண்காணிப்புக்கு கூடுதல்  வாடகையும் கூடுதல் வருமானம் கிடைக்கும்   என்பது. ஆனால்  சுப்பிரமணியமோ  உங்கள் வைத்தியம் நல்லா இருக்கும்போது  வைத்தியம் செய்ய வந்த இடத்தில் எட்டாம் நம்பர் என்ன, ஒன்பதாம் நம்பர் என்ன?  நான் எட்டாம் நம்பருக்கே போகிறேன் என்று மருத்துவ நிர்வாகத்தினரின் புருவத்தை  நெளிய வைத்தார்.

மருத்துவர் போனபின் மனைவி அழத் தொடங்கினார். “என்னங்க இந்த டாக்டரும் இப்படி சொல்றாரு. காலையில் வந்து பார்த்த ஹார்ட் டாக்டர், இதயத்துக்கு போகும் இரத்தக்குழாயிலுள்ள அடைப்புகளை  நீக்கினதுக்கு அப்புறம் தான் சிறுநீரகத்துக்கு  வைத்தியம் பன்றது நல்லது. இல்லாட்டி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்னு  சொன்னாரு. அதுக்குப் பின்னால மதியம் வந்த யூராலஜி டாக்டர், மூத்திரக்குழாயில்  வீக்க அடைப்பை சரி செய்தால்தான் எந்த வைத்தியமும் பண்ணுறதுக்கு உடம்பு ஒத்துழைப்பு கொடுக்கும். இல்லாட்டி சிக்கல்தான்னு சொல்லி கை நிறைய மாத்திரைகள் முழுங்கச் சொல்லி எழுதிக் கொடுத்திட்டுப் போறாரு. சாயந்திரம் வந்த அல்சர் டாக்டர், முன்னால மூணு டாக்டருமாரு எழுதிக் கொடுத்த மாத்திரைக  ஒன்னுக்கு ஒன்னு எதிரானது. பக்கவிளைவு வந்து அல்சர் அதிகமாகும்னு இந்திந்த மாத்திரைகள் சாப்பிடாதீங்க! குடல்புண்ணு தன்மையை  தெரிஞ்சிக்க கட்டாயம் எண்டோஸ்  ஸ்கோப் குழாய் மூலம் டெஸ்ட் பண்ணினா நல்லதுங்கிறாங்கறாரு! இப்படி டாக்டருக்கு டாக்டர் தாம் பார்க்கிற‌ வைத்தியத்தையே முதல்ல பார்க்கணும்னு சொன்னா,  உயிரைக் காப்பாத்த எந்த‌ வைத்தியத்தை முதல்ல செய்யிறது? விதண்டாவாதம் புடிச்ச மனுஷன் நீங்க, வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டாம, என் உடம்பைத் தானமாத் தாரேன்னு சொல்லிட்டீங்க. பாவி பரப்பானுங்க உயிரோட அறுக்கப் பாக்கிறானு ங்களே’’ என்று சொல்லி புலம்பினார்.  சுப்பிரமணியம் வறண்ட உதடைத் திறந்து சிரிக்க முயன்றார். பற்கள்தான் தெரிந்தன. சத்தம் வரவில்லை. மெல்லத் தெம்பை வரவழைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசினார். ‘‘நான் என்னத்தே தப்பா சொல்லிட்டேன். மண்ணு‌ திங்கிறதை பிள்ளைக படிக்க உதவட்டும்! பல்லாயிரம் பேருக்கு  வைத்தியம் செய்ய உபயமாகட்டுமுன்னு  தான் சொன்னேன்”

“இங்க பாத்தீங்களா, இன்னும்  உங்க கம்யூனிஸ்ட் திண்ணக்கம் போகலை! நானே, எப்படியாவது உங்களை காப்பாத்தீருவோம். உங்க கண்ணெதுக்க கடைசிப் பிள்ளையை கரை சேத்துருவோம்முன்னு  ஊணு உறக்கமில்லாம  தவியாத் தவிச்சுகிட்டிருக்கேன். கொஞ்சம் கூட நெஞ்சில ஈரமில்லாம உசிரை விடறேன். உடலைத் தானம் தாரேன்னு சொல்றீங்களே? மனுஷனுக்கு திண்ணக்கத்தைப் பாரு!”  “சரிம்மா, தப்பு தான்.! இப்போ என்ன செய்யணுங்கிறே” “நான் என்ன உங்களைப் போல் படிச்சவளா? பட்டு பட்டுன்னு சொல்ல! இந்த நாலு டாக்டர்மாரும் நாலுவிதமா சொல்றாங்களே. இவங்ககிட்டிருந்து உயிரோட தப்பி குணமாகி வீடு போற வழியை உங்க சங்கத்துக்காரங்க மூலமா கேட்டு சொல்லுங்க!”  அவர் மீண்டும் வறட்டுச் ‌சிரிப்பினை  உதிர்த்தார். உலர்ந்து பாளமாக விரிந்த உதடு கொண்டு சிரிக்கவும் பேசவும் சிரமமாக இருந்தது. மெல்ல கீழுதடும் மேலுதடும் ஒட்டாமல் பேசினார். 

“எங்க மோட்டார் மெக்கானிக்குகள்ள பஞ்சர் பார்த்து டயர் பொருத்தறதுக்கு, சக்கரம் பொருத்தறதுக்கு, ப்ரேக்கு, கீரு சரிபார்க்கிறதுக்கு, என்ஜின், ரேடியேட்டர் பழுது பார்க்கிறதுக்குன்னு தனித்தனி மெக்கானிக்குகள் இருப்பாங்க. இதுபோல தான் ஒவ்வொரு உறுப்புகளை பழுது பார்க்கத்  தனித்தனி ஸ்பெசலிஸ்ட் டாக்டருக இப்போ வந்திட்டாங்க! ஆனா எங்க மெக்கானிக்குகள் தனித்தனியே கழட்டி மாட்டினாலும் மீண்டும்  வண்டியை ஓடவைக்க ஒரு ஒருங்கிணைப்பு இருக்கும்! இந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டருகள்  கிட்ட ஒருங்கிணைப்பு இல்லை! அவங்கவங்க  சம்மந்தப்பட்ட உறுப்புக்களைப் பத்தி தனித்  தனியாக யோசிக்கிறாங்க. மருந்துகள் முரண்படுதான்னு யோசிக்கிறதில்லை! அது நோயாளி உயிருக்கு ஆபத்தாயிருமுன்னு நினைக்கிறது இல்லை! எல்லா உறுப்புகளை இணைத்து பார்க்கும் கூட்டுப் பொறுப்பு உள்ள சிந்தனை குறைஞ்சு போச்சு. நான் பெரியவனா, நீ பெரியவனாங்கிற  தொழிலகங்காரம் தான் ‌பிரச்சனை!  இதனால் இவுங்க நோயாளிகளை உயிரோட்டமுள்ள மனுஷங்கிற எண்ணத்தை விட கேசுங்கிற எண்ணம் தான் தூக்கலா இருக்கு!’’ என்று சொல்லி உதடு உரசாமல் சிரித்தார்.  “ஏங்க, இங்கேயிருந்து நல்லபடியா வெளியேற வழி கேட்டா, வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்கீங்க? உங்க உடம்பு அவஸ்தையும் சேர்த்து மனசுக்குள்ள சுமந்து நான் படுறபாடு உங்களுக்குத் ‌ உறுத்தலையா?” “தாயி, நீ, என்னைப் பெத்த அம்மாவை விட பல மடங்கு என்னை மனசாலும் உடம்பாலும் தூக்கிச் சுமக்கிற! பெத்தபிள்ளையை மாதிரி பண்டுதம் பார்க்கிற! இதை எல்லாம் மறக்க முடியுமா. அடுத்த பிறவின்னு ஒண்ணுருந்தா, நீ என் ‌வகுத்தில  மகனா பிறக்கணும்!’’ என்றவர் தொண்டை அடைத்தது; கண்ணீரை பெருக்கினார். இதைப் பார்த்ததும் மனைவியும் விம்மி விசும்பி கண்ணீர் பொங்கினார். அவரை அணைத்து கண்ணீரைத் துடைத்து விட்டார். சற்று அமைதி காத்து மெல்ல கரகரத்த குரலில் பேசினார். “நம்ம இளங்கோ டாக்டரை வரச் சொல்லி இருக்கிறேன். அவர் வந்ததும் டிஸ் சார்ஜ் ஆகிருவோம். யூரின்ல கிரியாட்டினைக்  குறைக்க அவரு சில நல்ல கை பக்குவ மருந்து சொல்லி இருக்கிறார். அந்த மருந்தை சாப்பிடுவோம். லண்டனிலிருந்து பெரிய டாக்டர் வந்ததும் கலந்து பேசி இங்க டிரீட்மென்டை பார்த்துக்கலாம்!” 

மனைவி அந்த பிரிவின் பொறுப்பு மருத்துவரிடம்  டிஸ் சார்ஜ் பண்ணச் சொல்லி வேண்டினார். ‘‘இது மல்டி ஆர்கன் கேஸ். இப்ப அவரு உடம்பு இருக்கிற நிலையில டிஸ்சார்ஜ் பண்ணுறது ரிஸ்க். அந்த ரிஸ்கை  இந்த மருத்துவமனை ஏத்துக்காது.’’ என்று  முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார். மனைவி, கணவன் சுப்பிரமணியத்திடம் வந்து புலம்பி விம்மினார். “சரிம்மா. அழாதே. அவர்கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி ஒரு நிமிஷம் வந்துட்டுப் போகச் சொல்லு’’  அடுத்த அரைமணி கழித்து அந்தப் பிரிவு பொறுப்பு மருத்துவர் வந்தார்.சுப்பிரமணி படுக்கையில் இருந்தவாறே உட்கார முயன்றார். ‘‘பரவாயில்லை. உடலை அலட்டிக்கொள்ள வேண்டாம்.அப்படியே படுத்தபடியே சொல்லுங்க” என்றார் மருத்துவர்.  “ரொம்பத் தேங்ஸ். எல்லா டாக்டர்மாரும் என்னை நல்லாவே பார்த்துக்கிறீங்க. எனக்கு கொஞ்சம் பண நெருக்கடி. நான் ஊருக்குப் போனாத்தான் பணம் புரட்டிகிட்டு வந்து ட்ரீட்மெண்ட் டை கன்டினியு பண்ண முடியும்! பேஷண்டோட ரிஸ்க்கில டிஸ்சார்ஜ் பண்ணுங்கன்னு எழுதித் தர்றேன். ப்ளீஸ் டிஸ்சார்ஜ் பண்ணுங்க டாக்டர்” சுப்பிரமணியம் தொண்டை கரகரக்கச் சொன்னார்.