பேசும் காச்சக்காரம்மன் – 7
அதாவது நமது மூளையின் நரம்புகள் மிகவும் தெளிவாக யோசித்து மூளை, நுரையீரல், இதயம், குடல், கல்லீரல் போன்ற அத்தியாவசியமான உள்ளுறுப்புகளுக்கு செல்லக்கூடிய இரத்தக் குழாய்களையெல்லாம் ஏதும் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறது. அதேசமயம் கை, கால்களுக்கு செல்கிற இரத்த ஓட்டத்தை குறைத்து அதன் மூலமாக வெப்பத்தை சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால்தான் காய்ச்சலின் ஆரம்ப நிலையில் உடம்பு மற்றும் தலை சூடாக இருந்து கை, கால்கள் குளிராக இருப்பதும், சிலருக்கு உடல் கனகனவென்று இருந்து ஆனால் வெளியே தொட்டுப் பார்க்கையில் குளிருவதைப் போலவும் இருக்கிறது. குழந்தைகளின் தலைகள் எப்போதும் வெதுவெதுப்பாகவே இருப்பதற்கு அவர்களின் மூளை வளர்ச்சிதான் காரணமே தவிர அது நோயல்ல. அவர்களுக்கு எப்போதுமே மிதமான சூட்டில் வெந்நீர் குளியல்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். அதே சமயத்தில் நம்மை அறியாமலே நாமும் நம் உடலிற்கு காய்ச்சல் காலத்தில் நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதாவது ஹைப்போதலாமஸ் உள்மைய வெப்பநிலையை 100 என்று செட் செய்யும்போது நம் உடலின் வெப்பநிலை 98.6 என்றுதானே இருக்கும். அந்த சமயம் பார்த்து நம் ஹைப்போதலாமஸிற்கு 98.6கூட குளிர்ந்த உடம்பைப் போலத்தான் தோன்றும். அப்போது உடனே நாம் ஒரு போர்வை எடுத்து போர்த்திக் கொண்டால்தான் நமக்கு நன்றாகவே இருக்கிறது. மருத்துவமனைக்கு யாரேனும் போர்வைப் போர்த்திக் கொண்டு நடுங்கிக் கொண்டே வந்தால் அவர்கள் காய்ச்சலின் ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு வெப்பம் இன்னமும் தேவைப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அப்போது அவர்களுக்கு சூடேற்றவதற்காக கை கால்களை தேய்த்துவிடலாம். அருந்துவதற்கு ஏதாவது சூடாக குடிக்கக் கொடுக்கலாம்.
எனவே காய்ச்சல் வந்த பிள்ளைகளின் உடலானது உள்மைய வெப்பநிலைக்கு ஏற்ப செட் செய்யும்வரை குளிரத்தான் செய்யும். இந்த சமயத்தில்தான் நாம் மிதமான சூட்டில் வைத்து வெந்நீர் குளியல் செய்ய வேண்டும். நாம் குளிக்கின்ற தண்ணீர் அதிகமான சூடாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை காலை, மாலை என இரண்டு வேளையும்கூட குளிக்க வைக்கலாம். ஆனால் காலையில் உடம்பு குளிராக இருக்கையில் வெந்நீர் வைத்து குளித்திருந்தாலும் மாலையில் அவர்கள் உடம்பு அனலாய் கொதித்துக் கொண்டிருந்தால் அப்போது அதை புரிந்துகொண்டு குளிர்ந்த தண்ணீரில்தான் குளிப்பாட்ட வேண்டும்.
அடுத்தபடியாக உடலின் வெப்பநிலை ஹைப்போதலாமஸின் உள்மைய வெப்பநிலைக்கு ஏற்ப செட் செய்தவுடன் உடல் முழுவதுமே இப்போது அனலாய் கொதிக்க ஆரம்பித்திருக்கும். அந்த சமயத்தில் தோலிலுள்ள ஈரப்பதம்கூட வற்றிப்போய் உடம்பே வறண்டு கரும்புச் சக்கையைப் போல ஆகியிருக்கும். இந்த சமயத்தில்தான் 98.6°க்கு அருகாமையில் இருக்குமாறு மிதமான குளிர் தண்ணீரில் அவர்களை குளிக்க வைக்கலாம். நாம் குளிக்கின்ற தண்ணீரின் சூடோ அல்லது குளிர்ச்சியோ உடல் காய்ச்சல் வெப்பநிலையைவிட அதிக வித்தியாசமாக இருந்தால் அதற்காகவும்கூட ஹைப்போதாமஸ் கோபித்துக் கொண்டு காய்ச்சலின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும் என்பதால் இத்தகைய விசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, அனலாய் கொதிக்கிற காய்ச்சல் வந்த பிள்ளைக்கு நன்கு குளிர்ந்த தண்ணீரில் போய் குளிக்க வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளோம். அப்போது என்ன ஆகும்? குளிர்ந்த தண்ணீர் ஊற்றியவுடன் உடலின் வெப்பநிலை சர்ரென்று உடனே கீழே குறைந்துவிடும். அதை உணர்ந்துவிட்ட ஹைப்போதலாமஸூம் சட்டென்று, அச்சச்சோ! உடம்பு இன்னுமே குளிராய்த்தான் இருக்கு போலியே, இன்னும்கூட உடம்பை சிலிர்க்கச் செய்து சூடாக்க வேண்டியிருக்கும் போல என்று முன்பு இருந்ததைவிட அதிக காய்ச்சலுடையவர்களாக மாற்றிவிட வாய்ப்பிருக்கிறது. அதே சமயத்தில் உடல் காய்ச்சலாகி கொதித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் வெந்நீரைக் கொண்டுபோய் அவர்களைக் குளிக்க வைத்தாலும் அதிலும் ஒரு பிரயோஜனமில்லை. சரி, குளிக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது? ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை சரகா அவர்களின் குறிப்புப்படி தோலின் மேலடுக்கை உதக்தரா(Udakdhara) என்று குறிப்பிடுகிறார்கள். உதக் என்றால் தண்ணீர், தரா என்றால் பிடித்துக் கொள்வது. அதாவது தோலினது மேலடுக்கானது தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையது. நாம் சாலையில் வெளியே சென்றுவந்தால் அப்போது காற்றிலுள்ள தூசிகள், கெமிக்கல், காற்றில் கலந்துள்ள கிருமிகள் என தோலின் மேலடிக்கில்தான் வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஆக, நாம் குளிக்கும்போது தோலின்மீது படிந்துள்ள தூசி, கிருமிகள் எல்லாவற்றையுமே தண்ணீர் துடைத்தெறிந்துவிடும். அடுத்ததாக காய்ச்சலால் வறண்டுபோன தோலில் ஈரப்பத்தை இத்தகைய குளியலே மீட்டுக் கொடுக்கிறது. மேலும் குளியலால் தோலிலுள்ள மெல்லிய துளைகளெல்லாம் நன்றாக விரிவடைந்து உடலிலுள்ள வெப்பத்தை வெளியே கடத்துவதற்கும், வெளியிலுள்ள ஈரப்பதம் உள்ளே கடத்துவதற்கும் உதவுகிறது. இதனால்தான் குளித்தவுடன் உடம்பானது இலகிக் கொடுக்கிறது, மனம் இலேசாகி அமைதியாகிறது. உடம்பும் உள்ளமும்கூட ஒன்றாக சமநிலைக்கு வருகிறது. இவையெல்லாமே குளிக்கும்போது நடக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம்தான் சரியாக குளிக்காமல் இன்னமும் காக்காவை குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோம். காய்ச்சல் வந்தவர்களை குளிக்க வைக்கும்போது மெதுவாகத்தான் ஆரம்பிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே குழந்தைகளின் மீது தண்ணீரை எடுத்து படாரென்று ஊற்றிவிடக் கூடாது. அதே சமயம் தண்ணீரை கணுக்காலிலிருந்து ஊற்றி மெல்ல மெல்ல தலைக்கு என ஊற்ற வேண்டும். முதல் குளியலின்போதே தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிவிட்டால் உடம்பு விரைவாக குளிர்ந்துபோய் அதிக நடுக்கத்தைக் கொடுக்கும். இத்தகைய நடுக்கத்தால் தசைகள் சிலிர்த்து அதனால் காய்ச்சல் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. மேலும் குளியலுக்கு முடிந்தவரையில் சுத்தமான தண்ணீரை உபயோகப்படுத்துவது நல்லது. நாம் குளித்துக் கொண்டிருக்கும்போது மூச்சுப் பயிற்சிகளையும்கூட செய்யலாம். இதனால் உடலோடு சேர்ந்து மனமும் இலகுவாகி புத்துணர்வைக் கொடுக்கும். இனிமேலும் நாலு செம்பு தண்ணீரை எடுத்து அரக்கப்பரக்க ஊற்றிவிட்டு நான் குளித்துவிட்டேன் என்று சொல்வதெல்லாம் சரியா, என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஆக, காய்ச்சல் வந்த குழந்தைகளை கட்டாயம் குளிக்க வைக்கத்தான் வேண்டும். அவர்களை குளிக்க வைப்பது என்பதுமே ஒரு வைத்திய முறைதான். குழந்தைகள் எனக்கு உடம்பு குளிருது என்று சொல்லும்போதும், தலை மற்றும் உடம்பு கொதித்து ஆனால் கை கால்கள் குளிர்ந்துபோய் இருக்கும்போதும், அவர்கள் உடம்பு சூடாக இல்லாவிட்டாலும் கிருமிதொற்றின் ஆரம்பநிலையில் நடுங்கினாலும் அவர்களுக்கு மிதமான வெந்நீரிலும், அதேசமயம் உடம்பு முழுவதும் அனலாய் கொதிக்கையில் மிதமான குளிர் தண்ணீரிலும் குளிக்க வைத்தால் குழந்தைகளுக்கு காய்ச்சலால் வந்த அசதி குறைந்துவிடுகிறது. அவர்கள் புத்துணர்வு பெற்று அதனால் நன்கு பசித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு உடம்பு வலியுமே நீங்கி நன்றாக தூங்கியும்விடுவார்கள். அன்பு பெற்றோர்களே, உங்களது பிள்ளைகளுக்கு எந்தெந்த சமயத்தில் வெந்நீரையும், குளிர்ந்த நீரையும் உபயோகப்படுத்தி குளிக்க வைக்க வேண்டும் என்பது உங்களது புரிதலில்தான் இருக்கிறது. அப்படி அவர்களை குளிக்க வைப்பதன் வழியே உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவதால் குழந்தைகளின் காய்ச்சல் வீரியத்தைக் குறைக்க முடியும். அதனால் உடலும் அதிகமாக வெப்பமடைவதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புகளிலிருந்து தப்பித்துவிடும். அவர்கள் விரைவில் காய்ச்சலிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். ஆனால் ஒன்று, இத்தகைய குளியலையெல்லாம் பார்த்துப் பார்த்து மருத்துவமனையில் செய்யமாட்டார்களே. ஆதலால் நாம் தான் நம் ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் பிள்ளைக்கு குளிருகிறதா வெந்நீர், சூடாக இருக்கிறதா குளிர் தண்ணீர் குளியல் என்று செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, காய்ச்சலை குணப்படுத்த மருத்துவர்கள் மட்டும் சிகிச்சை செய்வது ஒருபுறம் இருக்கட்டும், பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு குளியல் சிகிச்சையை அன்றாடம் செய்யலாமே.
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com