headlines

img

‘வள்ளலார் வரலாற்றில் கை விளக்குகளாய் இரு நூல்கள் ’

“சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை சாதி, சமயச் சடங்கு வழிபாடுகள் நீக்கிய பொது வழிபாட்டு முறைக்குக் கொண்டுவர வள்ளலார் முயன்றபோது,  அங்கு பரம்பரை பூசாரிகளாக இருந்த தில்லை மூவாயிரவர் என்னும் பிராமண தீட்சிதர்களுக்கும்  வள்ளலாருக்கும் பிணக்கு ஏற்பட்டது. அந்த நேரம் ஆடூர் சபாபதி பூணூல் நீக்கி, சிகை மழித்து தான் சாதி வர்ணம் கடந்தவன், வள்ளலாரைப் பின்பற்றுப வன் என அறிவித்தார்.  இதனால் வள்ளலாருக்கு அவர்மீது முதல் கட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆடூர் கிராமத்து குடி யிருப்பை காலிசெய்து வடலூரில் வந்து குடும்பத்தினருடன் குடியேறினார்.  அவர் குடியிருந்த வீட்டுக்கு வைத்தபெயர் ராமலிங்க மந்திரம்.”   இப்படி ஆடுர் சபாபதியை அறிமுகம் செய்கிறது “வடலூர் வள்ளலார் தெய்வ நிலயம் - இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் வந்த வரலாறு” என்ற சிறுநூல்.  16 பக்கங்களே உள்ள நூல் என்றாலும் பல வரலாற்று நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. வள்ளலார் சித்தி அடைந்தபின் ஆடூர் சபாபதி எப்படி தலைகுப்புறக் கவிழ்ந்து போனார்;  சத்தியஞான வழிபாட்டில் சடங்குகளை புகுத்தினார்; சத்திய ஞானசபைக்கு மக்கள் அளித்த 80  காணி நிலத்தை ட்ரஸ்டாக்கி,  தானே டிரஸ்ட்டி என்று  அறிவித்துக்கொண்டு வாரிசுகள் அதிகாரம் கொள்ள வழி வகுத்தது என்ற வரலாற்று நிகழ்வுகளை அம்பலப்படுத்துகிறது.  அதேநேரம் ஆடூர் சபாபதி  வள்ளலாரின் படைப்புகள், ஓலைச் சுவடிகள், காகிதங்களில்  எழுதப்பட்டவை ஆகியவற்றைத் தொகுத்த பெரும்பணியைக் குறிப்பிடவும் தவறவில்லை.  மறுபக்கம் அவையெல்லாம் சபாபதியின் புதல்வர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியாரின் வம்ச சொத்தாக மாற்றப்பட்டு இருந்தபோது அதை மீட்க தந்திரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்து சமயப் பாதுகாப்பு வாரியத்தின் உயரதிகாரியாக இருந்த ஆ.பாலகிருஷ்ணப்பிள்ளை வள்ளலாரின் படைப்புகளை மீட்டதோடு,  ட்ரஸ்ட் வசமிருந்த சத்திய ஞான சபையின் நிலங்கள் வாரியத்தின் வசம் வரும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் 1938 ல் வெற்றி பெற அவர் காரணமாக இருந்ததும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.  - இவ்வளவுக்குப் பின்னும் பூசகர்கள் வழிபாட்டு உரிமையை பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் பரம்பரை யில் இருந்து மீட்பதற்கான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடத்தப்பட்டு 2007-இல் நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கியது வரை சுமார் 150 ஆண்டு கால வரலாற்றுப் பின்புலம் சிப்பிக்குள் முத்து போல் இந்த சிறு நூலில் பொதிந்துள்ளது.  இதனை வழங்கியுள்ள ஐந்திணை வெளியீட்டகம், “வள்ளலார் சன்மார்க்க வரலாற்று கால குறிப்புகள்” என்ற இன்னொரு சிறு நூலையும் வழங்கியுள்ளது.  மருதூரில் வள்ளல் பெருமான் பிறந்த 1823 ஆம் ஆண்டு தொடங்கி 1865- ல் சன்மார்க்க சங்கம் நிறுவியது; தர்மசாலை கட்டுவதற்கு வடலூர் மக்கள் 1867- ல் 80 காணி நிலம் கொடுத்தது; அதே ஆண்டில் முதியோர் கல்வியையும் உள்ளடக்கிய சன்மார்க்க போதினி பாட சாலை அறிவிப்பு; 1869 - ல் அருட்பா - மருட்பா வழக்கு; கல்வி உதவித்தொகையுடன் 1872 - ல் சமரச வேத பாடசாலை அறிவிப்பு;  1874 - ல் வள்ளல் பெருமான் சித்தி பெற்றது; 1875- ல் பிரம்மஞான சங்கம் தொடங்க வள்ளலாரும் காரண மென கர்னல் ஆல்காட்  - பிளவட்ஸ்கி கூறியது;  1906- ல் வள்ள லார் பற்றிய சுருக்கமான வரலாறு தென் ஆற்காடு மாவட்ட மேனுவலில் (கெசட்டில் ) வெளிவந்தது;  1917 - ல் ஜீவகாருண்ய ஒழுக்கம் முதன்முதலாக வெளிநாட்டில் (இலங்கையில்) வெளியிடப்பட்டது; 1937 - ல் ஜோதி ராமலிங்கம் என்ற பெயரில் வள்ளலார் வரலாறு திரைப்படமாக வெளிவந்தது;  வள்ளலாராக திருச்செந்தூர் தீட்சிதர் என்னும் முத்து பாகவதர் நடித்தது;   1964 -ல் தில்லியில் அருட்ஜோதி ராமலிங்க மிஷன் சார்பில் சன்மார்க்க சங்கம் தொடங்கியது;  1973-ல்  திமுக ஆட்சியில் சென்னை ஏழுகிணறு வடக்குப்பகுதி வள்ளலார் நகர் எனப் பெயர் மாற்றம் பெற்றது; 1986-ல் வடலூரில் திருவருட்பா இசைச் சங்கம் தொடங்கி இசை விழா நடத்தியது; வள்ளலார் தெய்வ நிலையங்கள் சமயம், மதம் கடந்த ஒன்று என 1988ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சாமிக்கண்ணு தீர்ப்பளித்தது; 2018 - ல் ஆ. பால கிருஷ்ண பிள்ளை பதிப்பித்த திரு அருட்பா ஆராய்ச்சி செம்பதிப்பு 12 நூல் தொகுப்புகளை அவரது கொள்ளு ப்பேரன் தமிழ் வேங்கை ஐந்திணல வெளியீட்டகம் வழி மீண்டும் வெளியிட்டது என ஏராளமான தகவல்கள் காலவரிசைப்படி இச்சிறு நூலில் தொகுக்கப்பட்டு ள்ளன.  புத்தாய்வு செய்யப்புகும் இளம் ஆய்வாளர்களுக்கு இது ஒரு  கைவிளக்காக அமையும். சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் இரு நூல்களையும் ஆக்கி தந்திருக்கும் மு.வேதரெத்தினம் அவர்களின் பணி பாராட்டத்தக்கது.