ஆய்வியல் அறிஞர் அருணன் எழுதியுள்ள புதிய நூல் “தேவ - அசுர யுத்தம், ஆரிய திராவிட யுத்தமா? என்பது புராண புனை கதைகள்தான் இந்தியா வின் வரலாறு என்று வரலாற்றிற்கு வர்ணம் அடிப்பவர்கள் மத்திய ஆட்சியதி காரத்தை மீண்டும் தக்கவைத்துள்ள நிலையில், மெய்யான வரலாற்றை நோக்கி வெளிச்சக் கற்றைகளை வீச வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது. அதற்கு இந்த நூல் துணை நிற்கும் என்பது திண்ணம். புராணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள்கள் இன்னமும் சமூக பெருவெளியில் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டு ள்ளனர். இன்னும் சொல்லப்போனால் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் துணையுடன் புராணங்கள் புனர மைக்கப்படுகின்றன. இந்தப் பின்னணி யில் புராணங்கள் குறித்த ஒரு மறுவாசிப்பாக இந்த நூல் அமைந்து ள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை முடக்கிப் போட்டு விட சங் பரிவாரம் மூர்க்கமாக முயற்சிப்ப தன் பின்னணியில் ஆக்கிரமிப்பு வரலாற்றின் வேர்கள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்ற அச்சமும், உண்மை வரலாறு உலகிற்கு முகம் காட்டி விடக்கூடாது என்ற வன்மமும் மறைந்திருப்பதை உணர முடியும். இது என்ன வேத விதியா? என்று கூறுவதன் மூலம் வேதங்களுக்கு ஒரு புனிதத்தை ஏற்றிப் போற்றவும், அசு ரர்கள், அரக்கர்கள் என்று எதிரிகளை விளிப்பதன்மூலம் அசுரர்களும், அரக்கர்களும் அநீதி நிறைந்தவர்கள், அருவருப்பானவர்கள், தர்ம நியாயங்களுக்கு கட்டுப்படாதவர்கள் என்பதை பொதுப்புத்தியில் புத்தி சாலித்தனமாக உறைய வைத்துள்ளனர்.
கதைகளின் வழியே சென்று, புராணங்களை அலசி ஆராய்ந்து உருவாக்கப்பட்ட கதைகளின் உண்மை முகத்தை காட்டுகிறது இந்த நூல். கால்நடைகளை மட்டுமே மூலதன மாக கொண்டிருந்த ஆரியர்கள் இந்தியா வுக்குள் வரும் போது இங்கு செழுமை யான நாகரிகப் பின்புலம் கொண்ட திராவிட நாகரிகம் நிலை பெற்றிருந்தது என்பதை இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவ்வாறு வந்த ஆரியர்கள் இங்கு இருந்த மக்களை தாஸர்கள், தஸ்யூக்கள் என்று அழைத்தனர். இதுவே பின்னர் அசுரர்கள் என்றாயிற்று. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற நீண்ட நெடிய போர் என்று சித்தரிக்கப்படுபவை அனைத்தும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரின் சித்தரிப்பே என்று விளக்கு கிறது இந்த நூல். பாற்கடலை தேவர்க ளும், அசுரர்களும் சேர்ந்து கடைந்து கிடைத்த அமுதத்தை தேவர்கள் கவர்ந்த கதையும், மூன்றடி நிலம் கேட்டு கடைசி யில் கொடுத்தவன் தலையிலேயே கால் வைப்பதும், திரிபுரம் எரிந்ததும் இந்த நெடிய போரின் வழியே புனையப்பட்ட கதைகள்தான். இதுகுறித்து ஏராளமாக எழுதப்பட்டும், பேசப்பட்டும் வந்திருந்த போதும், வரலாற்று அறிஞர்களின் ஆய்வின் துணை கொண்டு காத்திரமாக நிறுவியுள்ளார் அருணன். சிந்து சமவெளியிலும் கீழடியிலும் கிடைத்துள்ள கறுப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள் ஒத்த நாகரிகத்தின் ஓர்மையை முன்வைக்கின்றன. இருந்தவர்களின் நாகரிகத்தை வந்தவர்கள் ஏற்க வில்லை. வந்தவர்களின் நாகரிகத்தை இருந்தவர்கள் ஏற்கவில்லை.
இந்த முரண்பாடு மோதலானது. உணவு முதல் உடை வரை, உருவ அமைப்பு முதல் நிறம் வரை மாறுபட்டதால் வஞ்சகத்தின் மூலம் வீழ்த்தப்பட்டவர்களை இழிவானவர்களாக சித்தரித்திருப்பதன் பின்னணியே புராணங்களாகும் என பல்வேறு கதைகள் மூலம் இந்நூலில் நிறுவப்பட்டுள்ளது. வேதம், வேள்வி, யாகம் என்ப தெல்லாம் ஆரியர்களின் மூலதனமாக இருந்தது. பூர்வகுடிகள் இதை எதிர்த்தார்கள். தாடகையிடமிருந்து யாகத்தை காக்கவே விசுவாமித்ரன் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்ற தாக கூறப்படுகிறது. இயல்பாகவே அசுரர்கள் என கூறப்பட்டவர்கள் வேதத்தை எதிர்ப்பவர்களாகவும், யாகம் என்ற பெயரில் பொருட்களை அழிப்பதை எதிர்ப்பவர்களாகவும் இருந்துள்ளனர். இரணியன், பிரகலாதன் கதை தந்தைக்கெதிராக மகனை தூண்டிவிட்டு தந்தையை அழித்து தேவர்களை அதாவது எதிரியை சரணடைந்த கதைதான் என்கிறார் நூலாசிரியர். திரிபுரம் சிவனால் எரிக்கப்பட்டதாக கூறப்படுவது சமணர்களுக்கெதிரான அழிப்பு வேலையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். மகிஷன் என்ற அரசன் எருமையனாக மாற்றப்பட்டு துரத்தப்பட்டது ஏன்? காளி ஏன் கருப்பாக இருக்கிறாள்? வரம் தந்தவர் தலையில் கை வைத்தது ஏன்? என்று ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டு வரலாற்றின் வழியே பதில்களும் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தலில் அனுமன் யார் என்று ஓர் பெரும் ஆராய்ச்சி நடைபெற்றது. அனுமன் ஒரு திராவிடன் என்கிறார் அருணன். “மறுவாசிப்பு முறையில் நான் கூறும் சாத்தியப்பாடுகளையும், முடிவுகளை யும் ஒருவர் ஏற்காமல் போகலாம், ஆனால் அவரும் நிச்சயம் யோசிப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்கிறார் முன்னுரையில் ஆசிரியர். வாசிப்பும், மறு வாசிப்பும் பெரிதும் தேவைப்படுகிற இந்த காலத்தில் இந்த நூல் வாசிக்கத்தக்க நூலாக வந்திருக்கிறது. யோசிக்க விரும்புபவர்கள், கேள்வி கேட்பதில் ஆர்வம் உள்ளவர்கள், பதில்களை தேடிக் கண்டடைபவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
தேவ அசுர யுத்தம்,
ஆரியர் திராவிடர் யுத்தமா?
ஆசிரியர்: அருணன்,
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்,
69-24ஏ, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-1
விலை: ரூ.100