அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி யூனியன் பிரதேசஅரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில்தான் இவ்வாறு கூறியுள்ளது. இது போன்ற உள் ஒதுக்கீடுகள் ‘நீட்’ தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் என்றும், தகுதி - திறமைக்கு எதிரானது என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சமூக நீதியைக்குழிதோண்டிப் புதைக்க இதைவிட வேறு வார்த்தைகள் தேவையில்லை.
தமிழகத்தின் ஏழரை விழுக்காடு மத்திய அரசின் கவனத்துக்கு வரவில்லை என்றும் அதேவழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பதிலிருந்து அந்த ஒதுக்கீட்டையும் பாஜக அரசுஎதிர்க்கிறது தெரிகிறது. சமூக நீதிக்கு எதிராகவும்,ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பைச் சீரழிக்கும் முயற்சியாகவே மத்திய பாஜக அரசின் பதில் மனு அமைந்துள்ளது.மருத்துவப்படிப்பின் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததாக பாஜக அரசு கூறிவந்தது. அந்ததேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான் ஏழரை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதைப்பின்பற்றித்தான் புதுச்சேரி அரசும் 10விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியது. மாணவர்களின் தகுதியை நீட் தேர்வு நிர்ணயிக்கும் போது அதை எழுதிதேர்ச்சி பெற்ற மாணவர்கள் இட ஒதுக்கீடு பெற்றதனாலேயே தகுதி குறைந்து விடுவார்களா? சமூக நீதிக்கு எதிரான அந்த மனுவைத் திரும்பப்பெற மத்திய அரசை அதிமுக அரசு நிர்ப்பந்திக்கவேண்டும்.இதுமட்டுமல்ல மருத்துவக்கல்வியை தனியார் நிறுவனங்களின் வேட்டைக்குத் திறந்துவிடும் ஒரு முடிவையும் மோடி அரசு சமீபத்தில் எடுத்துள்ளது. லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இனி புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கலாம் என்பதுதான் அது. இதற்குஏற்ப இந்திய மருத்துவக்கவுன்சில் (எம்.சிஐ) மற்றும்பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சட்டவிதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
முன்பு லாபநோக்கமற்ற முறையில் செயல்படும் பதிவு பெற்ற அறக்கட்டளைகள், சங்கங்கள்,லாப நோக்கமற்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களேமருத்துவக்கல்லூரிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது இதற்கான எம்சிஐ விதிகளில் லாப நோக்கமற்ற என்பதற்கான பிரிவு நீக்கப்பட்டு லாபநோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க மோடி அரசுபச்சைக் கொடி காட்டியுள்ளது. மேலும் இந்தகல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களே அனுமதி அளிக்கும் என்று கூறி அதிலும் அரசு தனது பொறுப்பிலிருந்து லகியுள்ளது. மருத்துவக்கல்விக்கும் சமூக நீதிக்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.