headlines

img

பாலஸ்தீன மக்களுக்கு மோடி அரசு துரோகம்!

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஓராண்டுக் குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பரந்த ஆதரவுடன் ஐநா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை என்ற பெயரில் இந்தியா ஒதுங்கிக் கொண்டது கடும் கண்டனத்திற்கு உரியது. அணி சேரா அமைப்பை உருவாக்கிய பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமை திக்கு எதிரானது. நாடுகளை ஆக்கிரமிக்கும் வெறி கொண்ட கொள்கைகளுக்கு ஆதரவானது.

சர்வதேச நீதிமன்றத்தின்   ஆலோசனைகளை பெற்ற  பின்னரே இந்த தீர்மானம் கொண்டுவரப் பட்டது. ஐநா பொதுச்சபையில் மொத்தமுள்ள 193 உறுப்புநாடுகளில்  தீர்மானத்திற்கு ஆதரவாக 124 வாக்குகள் கிடைத்தன. அமெரிக்கா ஆதரவு நாடு களான பிரான்சு, பின்லாந்து கூட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. வாக்களிக்காத 43 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  

“பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டுகிறேன் என்றபெயரில் நுழைந் துள்ள இஸ்ரேல் ராணுவம்  கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்ததாக்குதலில் இருந்து மருத்துவமனைகள் கூட தப்பவில்லை. இதுவரை 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம டைந்துள்ளனர். வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மீதும் ஈவு இரக்கமின்றி  குண்டுகளை வீசி குழந்தைகள் பெண்கள்  என அனைவரையும் இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் பகுதிகளில் இஸ்ரேல் மக்களை குடியேற்றும் வகையில் புதிய குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதே ஐநா பொதுச்சபை தீர்மானத்தின் மையபொருள்.

ஏற்கெனவே இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் பாலஸ்தீனம் முறையிட்டபோது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. “அனைத்து புதிய குடியேற்ற நடவ டிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்”  என்றும் அந்த நீதிமன்றம் கூறியது. ராணுவத்தை பயன்படுத்தி ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது ஐநா கொள்கைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியது. ஆனால் இஸ்ரேல் அதை மதிக்க வில்லை.இவ்வளவுக்குப் பின்னரும், ஐநா பொ துச் சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் தனக்கான பொறுப்பில் இருந்து நழுவியுள்ளது. 

பாலஸ்தீனத்தில் “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு விரைவில் முடிவுக்கு வர வேண்டும். பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளி வான செய்தியை ஐநா தீர்மானம் எடுத்துரைத் துள்ளது. இதை இந்தியா ஆதரிக்காமல் புறக்க ணித்திருப்பது வரலாற்று பிழையாகும்.