headlines

img

நதி இணைப்பும் நிதி இணைப்பும்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தி ருக்கிறார்.  கோதாவரி ஆற்றிலிருந்து நீர் பெறும் மாநிலங்களுடன் பேசி 200 டிஎம்சி தண்ணீரை கட்டளை இணைப்பு வழியாக தமிழகத்திற்கு அனுப்பும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதை இறுதி செய்வதற்கு மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தர விட வேண்டும் என்று கோரியுள்ளார்.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழாக இறங்கிவிட்டது. அதனால் தீபகற்ப நதிகளை இணைப்பதே மாற்று ஏற்பாடாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர் இருப்பின் அளவு ஓராண்டுக்கு 860 கனமீட்டராக உள்ளது என்றும், தேசிய சராசரி 1869 கன மீட்டர் என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய மானிய நிதிஉதவி ரூ.7825.59 கோடி பாக்கியையும், விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை பிரதமர் செவி மடுத்து விரைவில் தமிழகத்திற்கான நிதியை  வழங்க வேண்டுமென்பது தமிழக மக்களின் கோ ரிக்கையாகும். ஆனால் நீர் பற்றாக்குறை மற்றும் நீராதார மேம்பாடு குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள யோசனை தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் மேகத்தை காட்டுவது போல் உள்ளது. 

தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் உள்ளன. அதில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 13,710 ஏரிகள் உள்ளன. தமிழக ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் எண்ணிக்கை 127. அதில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை 89. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை 38. இந்த அணைகளை சீரமைப்பது  அவசியம்தான்.  எனினும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு மழைநீர் சேகரிப்பு, வெள்ளக் காலத்தில் தண்ணீர் வீணாகாமல் சேமிப்பது ஆகியவை மிக முக்கியமானதாகும். கடந்த ஆண்டில் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. எனவே மழை வெள்ளக் காலங்களில் தண்ணீரை சேமிப்ப தற்கான ஏற்பாடுகளை மாநில அரசு உரிய முன்னேற் பாட்டுடனும் மிகுந்த கவனத்துடனும் அணுகிட வேண்டும்.

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் தமிழக அரசால் முன்மொழியப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கை எதையும் மாநில அரசு எடுக்கவில்லை. இந்த திட்டத்தில் புங்கா நதி முதல் கிருதுமால் நதி வரை 15 நதிகள் அடங்கி யுள்ளன. இதனால் 50 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.5166 கோடி வழங்க வேண்டுமென 2014ஆம் ஆண்டு அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார். இப்பொழுது இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு இன்னும் சில ஆயிரம் கோடி கூடுதலாகும். 

நமது மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப் பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும் எடப்பாடி அரசு மத்திய அமைச்சர் நிதின் கட்கா ரியால் தேர்தல் காலத்தில் முன்மொழியப்பட்ட கோதாவரி, காவிரி இணைப்புத்திட்டத்தை செயல் படுத்துவதற்கு வலியுறுத்துவது கையில் வெண் ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்றதாகும்.