தேர்தல் சமயத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார் : “கொள்முதல் விலை உயர்த்தினால், நுகர்வோர் விலையும் உயரும்”. அதைத்தான் இன்று பால் விஷயத்தில் செய்திருக்கிறார். விவசாயிக்கு லிட்டருக்கு ரூ4 உயர்த்திவிட்டு, நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ6 உயர்த்திவிட்டது அரசு. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை யும், நுகர்வோர்களையும் ஒரே சமயத்தில் ஏமாற்றி வருகின்றன தமிழ்நாடு அரசும், ஆவின் நிர்வாகமும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கடந்த 5 வருடமாக கொள் முதல் விலையை உயர்த்திட போராடி வரு கின்றன. குறிப்பாக பசும்பால் ரூ40ம் எருமைபால் ரூ50ம் லிட்டருக்கு உயர்த்திடக் கோரி சென்னை கோட்டை முற்றுகை உள்ளிட்டு பலவிதமான போராட்டங்களை நடத்திவிட்டன.
தற்போது சராசரியாக ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு லிட்டருக்கு ரூ22 முதல் 26 வரைதான் வழங்கப்படுகிறது. எஸ்என்எப் மற்றும் பேட் சத்து பொறுத்து, அத்திபூத்தாற்போல் சிலருக்கு மட்டுமே ரூ28 முதல் ரூ32 வரை கிடைக்கலாம். ஆனால் பெரும்பகுதி (90%) பாலுக்கு ரூ25 தான் லிட்டருக்கு கிடைக்கிறது. இதில் ரூ4 உயர்வு என்பது கடலில் பெருங்காயம் கரைத்த கதைதான். அதாவது 5% கொள்முதல் விலை உயர்வு மட்டுமே. ஆனால் கடந்த 5 வருடங்களில் நுகர்வோ ருக்கு இருமுறை ரூ.4க்கு மேல் உயர்த்தி உள் ளது. மூன்று, நான்கு விதமான விலையில் அதிக பட்சமாக லிட்டருக்கு ரூ.50 விற்கிறது. இதிலிருந்து மேலும் தற்போது ரூ.6 லிட்டருக்கு உயர்த்தி இருக் கிறது. கொள்முதல் விலையை விட 100% விற் பனை விலை உயர்த்தி விற்கவேண்டிய அவசியம் என்ன? அல்லது 100% உயர்த்தி விற்கிறபோது, ஏன் கொள்முதல் விலையை படுபாதாளத்தில் வைத்திருக்கிறது? இதுதான் இந்த அரசின் விவசாயி விரோத, மக்கள் விரோத கொள்கை என்பது. வேறு வார்த்தையில் சொன்னால் விவசாயியையும், பொதுமக்களையும் மொட்டை அடிப்பது என்பது.
நுகர்வோருக்கு விலையை உயர்த்தாமலேயே, உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தித் தரும் வாய்ப்பும், வழியும் ஏராளம் இருக்கிறது. ஆம், ஆவின் நிர்வாகத்தை சீர்படுத்தினாலே போதும். உதாரணமாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆவினில் மட்டும் 20 முதல் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டு க்கு முன் ஒரு லிட்டர் பாலை பாக்கெட் செய்வ தற்கு, குஜராத் அமுல் நிறுவனம் 0.56 பைசா மட்டுமே சார்ஜ் செய்தது. ஆனால் ஆவின் நிர்வாகமோ அப்போது ரூ2.00 ஆக சார்ஜ் செய்தது. மற்ற நிர்வாக செலவுகள் எல்லாம் சேர்த்தால் கோடிக்கணக்கில் மிச்சம் அல்லது சிக்கனம் செய்து, சேமிக்க முடியும். ஆனால் அதைச் செய்ய மறுக்கிறது. ஏனென்றால், அங்கேதான் ஊழல் தாண்டவமாடுகிறது. ‘விவசாயி மகனான’ மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு இதெல்லாம் தெரியாத ஒன்றல்ல. எனவே உடனடியாக பால் விலையை உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும்.