headlines

img

‘முன்னாள்களின்’ ஆர்எஸ்எஸ் பக்தி

‘முன்னாள்களின்’ ஆர்எஸ்எஸ் பக்தி

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க வேண்டுமென்றும் அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

இந்த பரிந்துரைக்கு ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் தேர்தல்  ஆணையர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 275 பேர் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்த நாட்டிலேயே இன்னமும் கூட இனம் மற்றும் நிற ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அமெரிக்கா விற்கு ‘சட்டவிரோதமாக’ புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கை, கால்களிலே விலங்கு பூட்டி அவமதித்தது அமெரிக்க அரசு. ஆனால் அதைக் கண்டித்து இப்போது அறிக்கை வெளியிட்டுள்ள ‘பெருமக்கள்’ யாரும் வாய்திறக்கவில்லை.

அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பல்வேறு உலக நாடுகளின் இறை யாண்மையில் தலையிட்டு அட்டகாசம் செய்கிறது. வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது இணையர் சிலியா  புளோரஸ் ஆகியோர் அத்துமீறி கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு  ஈரான் மீது தாக்குதல் தொடுத்த அமெரிக்கா அந்த நாட்டின் தலைவர்களையும் படுகொலை செய்து வருகிறது. அடுத்து கியூபாவை அழிப்போம் என்று கொக்கரிக்கிறது அமெரிக்க வல்லாதிக்கம். அப்போதெல்லாம் இந்த அறிவுக்கொழுந்துகள் மவுனம் சாதித்தார்கள்.  

அவ்வளவு ஏன்? இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் கூட டொனால்டு டிரம்ப் பல்வேறு முறை இழிவுபடுத்தியுள்ளார். அநியாய வரி விதித்துள்ளார். அப்போதெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் கூட்டறிக்கை எதுவும் வெளியாகவில்லை. 

ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு என்றவுடன் இந்த ‘முன்னாள்கள்’ கொதித்து எழுந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழிவுக் கருத்தியல் மற்றும் கட்டமைப்பு குறித்து அமெரிக்க ஆணையம் ஆய்வு செய்து அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய மக்கள் தங்கள் வாழ்பனுபவத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை நன்றாகவே அறிவார்கள். ஆனால் இந்த ‘முன்னாள் களுக்கு’ இந்தியா மீதான தேசபக்தியை விட ஆர்எஸ்எஸ் மீதான குருபக்தி அதிகம்.