headlines

img

செயலி இருக்கட்டும்... தடுப்பூசிகளே தேவை...

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது என்று கூறும் நரேந்திர மோடி, அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும் வெளி நாடுகளிலிருந்துகொள்முதல் செய்வதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பதை உலகமே அறியும். ஆரம்ப காலத்தில் உற்பத்தியான தடுப்பூசிகளையும் கூடமற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, முதலாளிகளைப் போல லாபக்கணக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். 

ஆனால் இப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு கோவின் செயலி உதவும் என்றும் அதனால் தடுப்பூசி வீணாவதை மின்னணு முறையில் எளிதில் கண்காணிக்க முடியும் என்றும் மோடிகூறுகிறார். ஆனால் தடுப்பூசி உற்பத்தியை, கொள்முதலை விரிவாக்காமல், அதிகப்படுத்தாமல் எப்படி எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம்நிறைவேறும்; முழுமையடையும்?மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மோடி கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அதற்கான  செயல்திட்டம் என்ன? இந்தியாவில் இதுவரை 35 கோடி டோஸ்கள் தான் செலுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு டோஸ்களும் செலுத்திக் கொண்டவர்கள் எத்தனை சதவீதம் பேர்? இதுபற்றி கவலைகொள்ளாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரேநாளில் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை சிலாகித்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மை நிலைமை என்ன?

87 லட்சம், 55 லட்சம், 70 லட்சம், 63 லட்சம், 71 லட்சம், 67 லட்சம் இப்படித்தான் தடுப்பூசிசெலுத்தப்படுவது ஒருவாரத்தில் நடைபெறுகிறது. அடுத்த வாரம் 54 லட்சம், 38 லட்சம், 27 லட்சம் எனகழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்குள் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிபோட வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தினசரி செலுத்த தேவையானது 1 கோடி தடுப்பூசி.இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் கூட ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் ஆகும்.எனவே தடுப்பூசி எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கொள்முதல் செய்வதும் நம்நாட்டில் எங்கெங்கு உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தி செய்வதும் அவசர அவசியத் தேவை. அத்துடன் முகாம்கள் அமைத்துசெலுத்துவதை விட வீடு வீடாக செலுத்துவது இலக்கை விரைவில் அடைந்திட உதவியாக இருக்கும். அவ்வாறு செய்தால்தான் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்காமல் தப்பிக்க முடியும்?