headlines

img

இந்தியர்களின் மரபணு மதச்சார்பின்மையே...

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரேமரபணுதான் உள்ளது. வழிபாட்டின் அடிப்படையில் அதை பிரிக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். இதைப் படிக்கும்போது அனைத்து இந்தியர்களையும் சமமாக மதிக்கிற பரந்துபட்ட பக்குவம் ஆர்எஸ்எஸ்அமைப்புக்கு வந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்து இன்று வரை அது தன் குணத்தைமாற்றிக் கொள்ளவே இல்லை. நிலைமைக்கேற்ப அவ்வப்போது தங்கள் நிறத்தை மாற்றிக் காட்டுவார்களே அன்றி சனாதன மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும், கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கு கால்பிடிப்பதுமே தங்களது பிறவிப் பயன் என்று நினைக்கும் அமைப்பு அது.

ஒரு இந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைத்தால் அவர் இந்துவே அல்ல என்று பகவத் கூறுகிறார். ஆனால் அடுத்தவார்த்தையே பசு ஒரு புனித விலங்கு என்கிறார்.பசுவின் பெயரால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கெதிராக நடத்தியிருக்கிற படுகொலைகள், வன்கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.ஆர்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கிய மூலவர்களே ஒருவர் இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும். மற்றவர்கள் மதத்தைச் சேர்ந்த இரண்டாந்தர குடிமக்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று கூறித்தான் தங்கள் அமைப்பையே துவக்கினார்கள். அவர்களது அந்த சித்தாந்தத் தளத்திலிருந்து அவர்கள் மாறவே இல்லை. 

மோகன் பகவத் இப்படிக் கூறுகிறார் என்றால்அதற்கான பொருளை ஆர்எஸ்எஸ் அமைப்பின்தலைவர்களில் ஒருவரான தத்தாத்ரேயா  ஹோசபலே கூறுவதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது. அது இந்து மட்டும்தான் என்கிறார் அவர். இதைத்தான் வேறு வார்த்தைகளில் பகவத் கூறியுள்ளார். தத்தாத்ரேயா, மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்தான் வகுப்புவாதத்தை பரப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மதச்சார்பின்மை என்ற தளத்தில்தான் இந்திய ஒற்றுமையை கட்ட முடியும். பன்முகப் பண்பாடும் வேற்றுமையில் ஒற்றுமையும்தான் இந்தியப் பண்பாடு. ஆனால் இவர்கள்சனாதன அடிப்படையில் ஒற்றைப் பண்பாட்டை பிடிக்கத் துடிப்பவர்கள்.

இதே மோகன் பகவத் இன்னொரு இடத்தில் பேசும்போது, ஒருவர் இந்துவாக இருந்தாலே அவரிடம் இயல்பாக தேச பக்தி இருக்கும் என்று பேசியுள்ளார். இதன் பொருள் என்ன? இந்துமதம் அல்லாத மற்றொருவருக்கு தேசபக்தி இருக்காதா?அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கோட்பாடுகளின்படி அமைந்துள்ள நாட்டை இவர்கள் தேசமாகவே ஏற்பதில்லை. மாறாக இந்துத்துவா அடிப்படையிலான கட்டமைப்பையே தேசம் என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களை தேசத் துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு என்றால் அது மதச்சார்பின்மை என்பதாகவே இருக்க முடியும். மாறாக ஆர்எஸ்எஸ் முன்வைக்கிற இந்துத்துவா அடிப்படையிலான குறுகிய நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது.