மோடி அரசின் நயவஞ்சக சூழ்ச்சிகளை முறியடித்து விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் பேரெழுச்சி பெற்று வருகிறது. இப்படியொரு கிளர்ச்சி இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை. கிளர்ந்தெழும் விவசாயிகளின் எழுச்சியை கண்டு மோடி அரசும், ஆர்எஸ்எஸ் கும்பலும் மிரண்டு நிற்கின்றன. ஒருபுறம் அவசர அவசரமாக தில்லியை சுற்றி தடுப்பு அரண்களை எழுப்பி பதுங்கிக் கொள்ள பார்க்கிறது. ஆனாலும் தப்பிக்க முடியாது.
இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றி விடும் வகையில், மோடி அரசு 3 வேளாண் சட்டங்களை விவசாயிகள் மீது வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறது. அதனை திரும்பப்பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை காது கொடுத்து கேட்கக் கூட மோடிஅரசு தயாராக இல்லை. கொரோனா தொற்றைக்காட்டி விவசாயிகளின் அணி திரட்டலை தடுத்துவிடலாம் என பகல் கனவு கண்டது.
தில்லி எல்லைக்குள் விவசாயிகளை அனுமதிக்க முடியாது என மார் தட்டியது. அதன் விளைவே இன்று தில்லியை முற்றுகையிட்டு எல்லை பகுதிகளில் ‘டிராக்டர் நகரங்கள்’ உருவாகியிருக்கின்றன. லட்சக்கணக்கில் விவசாயிகள், கொட்டும் பனியில் 70 நாட்களாகபோராட்டத்தை தொடர்கின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போது வரை பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை. மாறாக சொந்த நாட்டு விவசாயிகளையே தீவிரவாதி என முத்திரை குத்தி அவதூறு செய்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஆர்எஸ்எஸ் கும்பல்திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி பேரணியைசீர்குலைக்க முயன்றது. ஆனால் ஆர்எஸ்எஸ் கும்பலின் அந்த சதியும் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.
சிஏஏ, என்ஆர்சி போராட்டத்தை சீர்குலைத்தது போன்று, விவசாயிகள் போராட்டத்திலும் சங்பரிவார் கும்பல் விவசாயிகள் மீது கல்லெறிந்து வன்முறையை தூண்டியது. ஆனால் அதிலும் மோடி அரசிற்கு தோல்வியே மிஞ்சியது. தற்போது தில்லி நீர் வாரியத்தின் மூலம் போராடும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தண்ணீர் டாங்குகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த கழிப்பிடங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசை தன்கடமையைச் செய்யத் தடுத்திருப்பது சட்டவிரோதமாகும். இந்த இரக்கமற்ற நடவடிக்கையின் மூலம்விவசாயிகளை பணிய வைக்கலாம் என மோடிஅரசு தப்புக் கணக்கு போடுகிறது. மத்திய அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை உடனேகைவிட வேண்டும்.
அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க விவசாயிகளின் எழுச்சியும் நாளுக்கு நாள் வீறுகொண்டு எழுந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். ஏறக்குறைய விவசாயிகளிடமிருந்து மோடி அரசு தனிமைப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுத்தால், விவசாயிகளின் ஒன்று பட்ட போராட்டம் மோடி அரசுக்கு பாடம் கற்பிக்கும்.