மேற்கு நாடுகள் பிரான்சைப் பின்பற்றட்டும்!
ஐரோப்பாவின் ‘இதயத்தில்’ இருந்து வரும் ஒரு முக்கியமான அறிவிப்பு, மத்திய கிழக்கின் நீண்டகால மோதலுக்கு புதிய திசையைக் காட்டுகிறது. பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க பிரான்ஸ் எடுத்த முடிவு, பெஞ்சமின் நேதன் யாகுவுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.
ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 147 நாடுகள், இந்தியா, சீனா, ரஷ்யா உள்பட, ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீ கரித்துள்ளன. ஆனால் இஸ்ரேலுடன் நெருக்க மான உறவுகளைக் கொண்ட மேற்கத்திய அரசு கள், இஸ்ரேலின் அங்கீகாரத்தைப் பெறாமல் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதை எப்போதும் தவிர்த்து வந்தன.
இந்த நிலைப்பாடு 2023 அக்டோபரில் காசா போர் தொடங்கிய பின்னர் மாறத் தொடங்கி யது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் அங்கீ காரத்தை நோக்கி முறையான நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கின. கடந்த ஆண்டு ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்லோவேனியா பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்தன.
இந்நிலையில், மக்ரோன் தனது உறுதி மொழியை வரும் செப்டம்பரில் நிறைவேற்றினால், பிரான்ஸ் அவ்வாறு செய்யும் முதல் ஜி7 உறுப்பு நாடாக இருக்கும். இந்த நடவடிக்கை சமாதான செயல்முறையில் உடனடி, நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மேலும் பல மேற்கத்திய நாடுகள் இதே திசையில் நடவ டிக்கைகளை எடுக்க தயாராக உள்ளன என்பதை குறிக்கிறது.
பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக இத்த கைய நடவடிக்கைகள், இஸ்ரேல் மற்றும் அமெ ரிக்காவின் கடுமையான எதிர்ப்பை புறக்கணித்து, உலகின் மிகவும் கொடூரமான மோதல்களில் ஒன்றில் உணர்வுகளில் தெளிவான மாற்றத்தை குறிக்கிறது.
இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளும், பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் உட்பட, நேதன் யாகுவை “மனிதாபிமான பேரழிவை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர” வேண்டுகோள் விடுத்து அரிதான கூட்டு அறிக்கையை வெளி யிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துவரும் அழுத்தத்தின் கீழ், இஸ்ரேல் நெருக்குதலுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்க லாம். காசாவிற்கு உடனடியாக தேவைப்படுவது குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களின் முழு மையான முடிவு, மற்றும் மனிதாபிமான உதவிக் காக அதன் எல்லைகளை முழுமையாக திறப்பது. ஆனால் ஐரோப்பா மேலும் அதிகமாக செய்ய வேண்டும். வெகுஜன கொலைகள், அழிவு மற்றும் இடப்பெயர்வு என்ற பேரழிவு மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யும் முன்முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
பிரான்ஸ் அறிவிப்பு தாமதமாக இருந்தாலும், மேற்கில் உள்ள பிற நாடுகளும் இதைப் பின்பற்ற வேண்டும்.