headlines

img

ஏமாற்று வித்தைகளும், எரியும் எதார்த்தங்களும்!

ஏமாற்று வித்தைகளும், எரியும் எதார்த்தங்களும்!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், ‘வளர்ந்த இந்தியா’ எனும் கவர்ச்சிகர மான முழக்கத்தால் போர்த்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் ஆவணம். 150 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு மணி நேர உரையில் சுருக்கிய நிதியமைச்சர், அதில் உழைக்கும் மக்களின் துயரங்களுக்கு ஒரு துளி மருந்தைக் கூடத் தடவவில்லை. மாறாக, அம்பானி-அதானி போன்ற பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதையே தனது இலக்காகக் கொண்டுள்ளார்.

இந்த பட்ஜெட்டின் ஆகப்பெரும் குற்றச் செயல், ஊரக ஏழை மக்களின் உயிர்நாடியான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கியிருப்பதாகும். சட்டப்பூர்வ உரிமையாக இருந்த ஒரு வாழ்வாதாரப் பாதுகாப்பை, அரசின் தயவில் இயங்கும் ஒரு  சாதாரணத் திட்டமாக மாற்றியிருப்பது வறிய வர்கள் மீது தொடுக்கப்பட்ட போர். மறுபுறம், தமிழ்நாட்டின் அரிய வகை கனிமங்களைச் சுரண்டத் தனியாக ‘வழித்தடம்’ அமைப்போம் என்று கூறுவது, மாநிலங்களின் வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் மோடி அர சின் பேராசையைக் காட்டுகிறது. ரயில்வே திட்டங் களுக்கு நிதி தராதவர்கள், கனிமங்களைச் சூறை யாட மட்டும் தனி வழித்தடம் அமைப்பது அப்பட்டமான வஞ்சகமாகும்.

உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் ஒதுக்கப்படும் ₹12.2 லட்சம் கோடி யாருக்கானது? சாதாரண ரயில்களில் இடமின்றித் தவிக்கும் மக்களுக்கா? அல்லது கார்ப்பரேட்களின் சரக்குகளைக் கொண்டு செல்லும் அதிவேக வழித்தடங்களுக்கா? கல்விக் கும், சுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்காமல், மதம் மற்றும் கலாச்சாரப் பயிற்சிகளுக்காகப் பத்தாயிரம் பேரைத் தயார் செய்வோம் என்பது, அறிவியலை விட இந்துத்துவ திட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. கீழடி போன்ற பண்பாட்டு அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு, ஒருதலைப்பட்சமான கலாச்சாரப் பிம்பங்களை முன்னிறுத்துவது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்.

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வில் தொடரும் அநீதி, கூட்டாட்சித் தத்துவத்தைச் சுடுகாட்டிற்கு அனுப்புகிறது. தமிழ்நாடு வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெறும் 29  பைசாவைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்குவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தண்டனைக்கு உள்ளாக்கும் செயலாகும். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாகும் என்று கதை சொல்லும் நிதி யமைச்சர், 2026-ன் வேலையில்லாத் திண்டாட்டத் திற்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் எவ்விதத் தீர்வும் சொல்லவில்லை. இது சாமானியர்களின் கண்ணீரில் சமைக்கப்பட்ட கார்ப்பரேட் விருந்து.