headlines

img

மாற்றமே தேவை...(வேளாண் சட்டம்)

கடந்த ஞாயிறன்று வழக்கம்போல பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அப்போது குடியரசு தினத்தன்று நம் தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இந்த நாட்டையே சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

உண்மையில் தேசியக்கொடிக்கு எந்த அவமானமும் நிகழவில்லை. செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பிரதமருக்கு நெருக்கமானவர்களே அங்கு சென்று சீக்கிய மதக்கொடியை ஏற்றினர் என்பது பின்னர் வெளியானது. ஆனாலும் பிரதமரும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவுஊடக ஊதுகுழல்கள் மீண்டும் மீண்டும் பழையபொய்யான தகவல்களையே பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு காவல்துறை அனுமதித்த பகுதியிலேயே அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அதிலிருந்து விலகி செங்கோட்டைக்கு சென்ற கும்பல் விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தில்லி காவல்துறையின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றியது. அப்போதும் கூட தேசியக்கொடியை இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே மனதின் குரல் உரையில் வேளாண் துறையை நவீனமயமாக்குவதில் இந்த அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை வருங்காலங்களிலும் தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். உண்மையில் வேளாண்மையில் நவீனம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் பிரதமர் சொல்லும் நவீனமயம் என்பதுவிவசாயத்தையே கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு வழிவகுப்பது என்பதாலேயே விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய புதிய வேளாண் சட்டங்களை முற்றாக ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென்றும், மின்சார திருத்தச் சட்டமசோதாவை கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் பிரதமரோ, ஒரே ஒரு போன்கால் செய்தால் போதும் பேச்சு நடத்தத் தயார் என்று கூறிக் கொண்டு மீண்டும் தங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லையென்பதையே குறிப்பிடுகிறார். அதனால் எவ்வித நன்மையும் விவசாயிகளுக்கு ஏற்படப்போவதில்லை. கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு விவசாயத்தை தாரை வார்க்கும் நிலைதான் ஏற்படும். அதனால்தான் விவசாயிகள் ஒத்தி வைப்பது வேண்டாம். முற்றாகரத்து செய்வதே  தேவை என்று தங்கள் போராட்டத்தை மேலும் தொடர்கிறார்கள்.எனவே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே வேளாண் விரோத சட்டங்களை முறைப்படி ரத்து செய்திட நடவடிக்கை எடுப்பதேஉண்மையில் விவசாயிகளுக்கு அரசாங்கம் நன்மை செய்வதாக அமையும். மற்றவை எல்லாம்
வெறும் பசப்பல் பேச்சன்றி வேறல்ல.