தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆட்கொல்லி ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, கடந்தாண்டு மொத்தம்15 பேரை படுகொலை செய்தது. அதன் ஓராண்டு நினைவு தினத்தில் கூட மக்கள் ஒன்று கூடிஅஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.அறிவிக்கப்படாத அவசர நிலையை தூத்துக்குடியில் பிரகடனப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.இந்நிலையிலேயே, தமிழக அரசின் இந்த காட்டுத்தர்பாரை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கண்டித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை எதற்காக அரசுதுன்புறுத்துகிறது; ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதுதானே தமிழக அரசின் கொள்கை நிலை; அதே கருத்து கொண்டவர்கள் மீது எதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது; ஏன்தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது; தமிழக அரசின்நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அல்லது துன்புறுத்துவதா? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
தூத்துக்குடி தொடர்பான அரசின் அணுகுமுறையைப் பார்த்தால் வேதாந்தா நிறுவனமேநேரடியாக தமிழகத்தை ஆட்சி செய்வது போன்றஎண்ணம் ஏற்படுகிறது. காரணம் ஏற்கனவே நீதிமன்றம், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீதுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால்இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தும் மிரட்டியும் வருகிறது. எப்படியாவது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்திட வேண்டும் என்பதில் மோடி அரசும், எடப்பாடிபழனிசாமி அரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. ஆனால் தூத்துக்குடி மக்களின் விடாப்பிடியானபோராட்டமும், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பும்அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இந்நிலையிலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை நாடி உத்தரவைபெற்றது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூட வேண்டும் என வழக்குமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், வேதாந்தாநிறுவனம் மோடி மற்றும் எடப்பாடி அரசுடன் இணைந்து அரங்கேற்றிய திட்டமிட்ட சதி என்பதை சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு சுற்றுச்சூழல் போராளி முகிலன் அம்பலப்படுத்தினார். அதற்கு இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, முகிலன் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை முகிலனை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. இதன் பின்னணிஎன்ன ? எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விரைந்து நீதிவழங்கிட சிபிஐ தனது விசாரணையை துரிதப்படுத்திட வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உயிருக்கும் தீங்கு விளைவித்திடும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட அரசு வெளிப்படையான, நேர்மையான கொள்கை நிலையை எடுத்திடவேண்டும்.