headlines

img

அதிர்ச்சியளிக்கும் அரசு மருத்துவமனைகள்

அரசு மருத்துவமனைகள் குறித்த சமீப காலமாக வரும் செய்திகள் மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. சாத்தூரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தி அடங்குவதற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கெட்டரத்தம் செலுத்தப்பட்டதால் அப்பாவி பெண்கள் பலர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆய்வு நடத்திய மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக உயர்அதிகாரிகள் தானமாகப் பெறப்படும் ரத்தத்தைப்பாதுகாக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் நடந்த கவனக்குறைவே ரத்தம் கெட்டுப்போகக் காரணம் என்று கண்டறிந்தனர்.  இந்த பிரச்சனை அடங்குவதற்குள் தற்போது மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின் வெட்டால் செயற்கை சுவாசக் கருவிகள் இயங்காமல் ஐந்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அலட்சியத்தால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள்பலியான சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 

அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் ஆகியவற்றில் மின் வெட்டு ஏற்பட்டால்அதை உடனடியாக சரிசெய்ய ஜெனரேட்டர்கள்உள்ளன. ஆனால் பல மருத்துவமனைகளில் அவை பழுதான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.இதுகுறித்து ஆய்வு செய்து குறைபாடுகளைக் களைய வேண்டிய அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்கின்றனர். மேலும் மதுரை சம்பவத்திற்கு மின்வெட்டு மட்டும் காரணம் அல்ல.செயற்கை சுவாசக் கருவிகள் ( வெண்டிலேட்டர்ஸ்) தரம் குறைவாக இருந்ததும் ஒரு காரணம்என்று சில மருத்துவர்களே கூறுகின்றனர். இந்தமரணங்களுக்கு அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.இறந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழுவை அரசு அமைக்க வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் அறிவிக்கப்படாத திடீர் மின் வெட்டுகளால் அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஜெனரேட்டர் வசதியை உறுதிப்படுத்தவேண்டும், அறுவை சிகிச்சைகளின் போதுமின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும் நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கவும் பழுதடைந்த ஜெனரேட்டர்களை போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்கவேண்டும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குவதைப்போலஅனைத்து அரசு பெரிய மருத்துவமனைகளுக்கும், குழந்தைகள் மருத்துவமனைகளுக்கும் தனிஇணைப்புகளை ஏற்படுத்தி மின்சாரம்வழங்க வேண்டும். அறிவிக்கப்படாமல் திடீர்,திடீர் என மின்வெட்டை நடை முறைப்படுத்துவதைத் தமிழ்நாடுமின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கைவிடவேண்டும்.மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முன்கூட்டியே அரசு மற்றும் தனியார்மருத்துவ மனைகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.