இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாய மாக மணிப்பூர் படுகொலைகள் பதிவாகி வரு கின்றன. குழந்தைகள், பெண்கள் என பாகுபாடின்றி கொன்றொழிக்கப்படும் இந்த இனப்படுகொலை, நமது அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.
எட்டு மாத குழந்தை உட்பட ஆறு பேரின் உடல்கள் நதியில் மிதந்த கொடூரம்; 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 50,000 பேர் அகதி களான பேரவலம்; போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு துணை போகும் ஆளும் கட்சி; மக்களின் உயிர்களை விட அதிகார நாற்காலியே முக்கியம் என்ற அவலம் - மணிப்பூரை முற்றாக சிதைத்துக்கொண்டுள்ளது.
ஆனால் மறுபுறம், வடகிழக்கில் அமைதி என்று மோடி அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது இந்து-கிறிஸ்தவ மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் தமது கட்சியின் கயமைத் தனத்தை மறைத்து, மணிப்பூர் முதல்வரை மாற்ற மறுத்து, உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களையும் புறந்தள்ளும் அராஜகத்தை பாஜக கூட்டணி அரசு அரங்கேற்றி வருகிறது.
சமீபத்தில் நடந்த என்கவுண்ட்டர் படுகொலை கள், ஒரு தரப்பினரின் வன்முறையைக் காரணம் காட்டி சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமலாக்கம் என்பது உள்பட முற்றிலும் கொடூர மான பாதையில் பாஜக அரசு பயணிக்கிறது. மணிப்பூரில் வாழும் இருபெரும் இன மக்களுக்கிடையே திட்டமிட்டு வெறுப்புணர்வை வளர்த்துவிட்ட பயங்கரத்திற்கு உடனடியாக முடிவு கட்டியாக வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்துள்ளது. இன்னும் குறிப்பாக பெண்களை ஆயுதமாக்கி பழிவாங்கும் கொடூரமும் சமூக ஒற்றுமையை சிதைத்துள்ள பாஜகவின் மதவெறி அரசியலும் ஒட்டுமொத்த தேசத்தையும் தலைகுனியச் செய்துள்ளது.
முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்; குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர் களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற குரல்கள் தற்போது, மணிப்பூர் பாஜகவிற்குள் ளேயே வலுத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
மணிப்பூர் நெருக்கடி, வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல். அரசியல் சாசனம் உறுதியளிக்கும் சமத்துவம், மதச்சார்பின்மை, மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பாற்ற தவறிய மோடி அரசின் தோல்வியின் வெளிப்பாடு.
நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் இந்த அராஜக ஆட்சியை மக்கள் தட்டிக்கேட்க வேண்டிய நேரம் இது. இல்லையேல் மணிப்பூர் இன்று, நாளை நாடு முழுவதும் என்ற நிலை உருவாகும். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது!