செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

நிழலின் முகம் கிழித்தால் தெரியும் நிஜங்கள் - ஜி.செல்வா

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நேரத்தில்  ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன்சுமார் 4 மணி நேரம் ஓடக்கூடிய தனது Reason ஆவணப்படத்தை சென்னையில் திரையிட்டார்.  தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே,  கௌரி லங்கேஷ்  ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளின் பின்னணியில், 2014 -18 ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொலைபாதகச் செயலையும், அதன் பின்னணியையும் இந்தப் படம் ஆவணப்படுத்தியிருந்தது. பத்திரிகையாளர் திரேந்திர கே.ஜா எழுதிய “ நிழல் ராணுவங்கள்” நூலின் வாசிப்பனுபவம் அப்படத்தின் காட்சிகளையும் உரையாடல்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. ‘இந்து தேசியம்’எனக் கூவிக்கொண்டே இந்திய மண்ணில் பிராமணிய ஆதிக்கத்தைத் திணிக்க அலைந்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைமுகமான வெறித்தனஅரசியலை, சதித்திட்டங்களை, செயல்பாடுகளை, நேரடி களஆய்வுகள்வழி எடுத்துச்சொல்லி நிழல் உலக தாதாக்களின் அடிவேரை இந்நூல் ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது. 

வேறுபாடுகளை, முரண்பாடுகளை உட்கொண்டு உடனிணைந்து உறவாடிவரும் மக்களிடம், இந்து மதத்தின் பெயரால், பிரிவினைவாத அரசியலை, பிளவுவாத கருத்தியலை எவ்வாறு ஆர்எஸ்எஸ் விஷமாக ஏற்றி வருகிறது என்பதை இந்நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.  குறிப்பாக, சாதிய, பாலின, வர்க்க வேறுபாடுகளை, சுரண்டலை நியாயப்படுத்தும் வர்ணாசிரம கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துக்கொண்டே, சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்தவர்களை ஆர்எஸ்எஸ்  எவ்வாறு அணிதிரட்டி வருகிறது என்பதை கருத்துச்செறிவோடு இப்புத்தகம் பேசுகிறது.  “இந்துத்துவா என்பது இந்து மதத்தைப் போல ஒரு மதமல்ல,  இந்துத்தன்மை கொண்ட ஒரு கோட்பாடு" என சவார்க்கர் வகுத்துக்கொடுத்ததை வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் சங்பரிவார், தங்களின்  அரசியல் லாபத்திற்காக வெகுமக்களை அணிதிரட்ட இந்து மதத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்நூல். சங்பரிவாரின் கீழ் இயங்கும் நான்கு அமைப்புகளையும் நேரடி தொடர்பின்றி தனியாக இயங்கும் நான்கு அமைப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவை செயல்படும் விதத்தை விவரிக்கிறது. அதில் இந்திய ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள ஆபத்தை அப்பட்டமாக உணர்த்தப்படுகிறது. அவற்றோடு இதை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. 

வன்முறையை, கலவரத்தை உருவாக்குவது பின்னர்,  வெறுப்புப்பேச்சின் ஊடாக மக்களைப் பிளவுபடுத்தி தேர்தலில் பாஜக எப்படி வாக்குகளை அறுவடை செய்கிறது என்பதை எத்தனையோ ஆதாரங்கள் வழி இந்நூல் எடுத்துச்சொல்கிறது.  தங்களை, தங்களின் அமைப்புகளை விமர்சிப்பவர்களை அல்லல்படுத்த நீதிமன்றத்தின் மூலம் அவதூறு வழக்குகளை தொடுக்கும் கேடுகெட்ட செயல்களை அம்பலப்படுத்தும் இந்நூல்.  ‘தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் மீது எண்ணற்ற அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக தபோல்கர் மீது 18 கிரிமினல் மற்றும் சிவில் அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒன்றில் கூட அவர் குற்றவாளியாக தண்டிக்கப்படவில்லை. 2013 ஆகஸ்ட் மாதத்தில் அவர் இறந்த போது 6 சிவில் வழக்குகள் நிலுவையில் இருந்தன."

அகிம்சாமூர்த்தியாக காவி உடையில் வலம் வரும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின், கேடுகெட்ட கொலை பாதக செயல்கள் ஆதாரங்களோடு இந்நூலில் அடுக்கப்பட்டுள்ளன. கலவரம், குண்டுவெடிப்பு, சிறுபான்மை மக்களை சித்ரவதை செய்தது ஆகியவற்றுக்காக விஷ்வ இந்து பரிஷத்தால் உருவாக்கப்பட்ட பஜ்ரங்தள் அமைப்பின் கோரமுகத்தை அம்மணமாக காண்பிக்கும் நூலாசிரியர் இவ்வமைப்பின் பின்னால் இளைஞர்கள் ஏன் செல்கின்றனர் என்ற காரணத்தையும் சொல்கிறார். "போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகாத காரணத்தாலேயே இந்துத்துவாவின் அராஜக தத்துவத்தின்பால் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அவ்வாறே சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வேலையில் இணைந்து செயல்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் இளைஞர்கள், சங்பரிவார இயக்கத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய செய்திகளும் இந்நூலில் உள்ளது. சமூக பொருளாதார கோபங்கள்தான் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களை இந்துத்துவாவை நோக்கி தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது. சமூக - பொருளாதார நீதியை அவர்கள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. அவர்கள் இணைந்திருக்க இயக்கங்களில், சாதி அடிப்படையில் ஒடுக்கப்படும் போதெல்லாம் மீண்டும் அவர்களது கோபம் கொதித்தெழும்" என குறிப்பிடும் இந்நூலாசிரியர் அதற்கான உதாரணங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். இந்நூலை வாசிப்பவர்கள், சகோதரத்துவமும், அன்பும் தழைத்தோங்கும் இந்தியதேசத்தை கட்டமைக்க எதிர்கொள்ள வேண்டிய சவால்களை உணரமுடியும். அது இன்றைய தேவையும் கூட. கடும் உழைப்பின் ஊடாக இந்த நூலை உருவாக்கிய  திரேந்திர கே..ஜா, தேவையறிந்து மொழியாக்கம் செய்த இ.பா. சிந்தன், சமூக உணர்வோடு பதிப்பித்த எதிர் வெளியீடு ஆகியோருக்கு தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டுள்ளது.


நிழல் இராணுவங்கள் 
ஆசிரியர்: திரேந்திர.கே.ஜா
தமிழில்: இ.பா.சிந்தன்
வெளியீடு: எதிர் வெளியீடு
நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002
பக்:200 விலை : 220/-
தொலைபேசி: 04259 - 226012

;