headlines

img

ஒன்றுபட்ட தொழிலாளர் போராட்டத்திற்கு வெற்றி....

மத்திய அரசு நிறைவேற்றும் மக்கள் விரோதச் சட்டங்களை  முன்கூட்டியே நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வேளாண் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களுக்கு முன்னோட்டமாக விவசாயிகளின் நிலங்களை அவர்களது ஒப்புதலின்றி பறிப்பதற்கான சட்டத்தை அதிமுக அரசு தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

தற்போது மின்சார திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதோடு, மின்துறை முற்றிலும் தனியார்மயமாகும். ஏற்கெனவே மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் மோடி அரசு முனைப்புக் காட்டுகிறது. 

இந்த பின்னணியில் தமிழக அதிமுக அரசு மின் பகிர்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்தது.இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிரந்தர ஊழியர்களை மின்வாரியப் பணிகளில் நியமிப்பதற்கு பதிலாக, மின்துறை தனியார் மயத்தின் முன்னோட்டமாக இந்த நடவடிக்கை அமைந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடுமின்சார ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் வெடித்தது.

சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தினர்.மின்வாரியம் தனியார்மயமாக்கப்படாது என்றும் பணி நியமனங்களை அவுட்சோர்ஸ் முறையில் செய்யமாட்டோம் என்றும் அமைச்சர் தங்கமணி அளித்த உறுதிமொழிக்கெதிராக மின்நிலைய பராமரிப்பு பணியை தனியாருக்கு விடப்படுகிறது என்று மின் ஊழியர் மத்தியமைப்பு (சிஐடியு)குற்றம் சாட்டியது. பல்வேறு அரசியல் கட்சிகளும்தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும்இந்த முயற்சியை வன்மையாக கண்டித்தன. 

மின்வாரியத்தின் முடிவால் ஐடிஐ படித்த தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவுபலியாகும். மேலும் மின்வாரியத்தில் பணியாற்றும்தற்காலிக பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் தர மறுக்கும் மின்வாரியம் தனியார் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக பணியாளர்களுக்கு கூடுதலாக ஊதியம் நிர்ணயித்தது ஏன்? என்ற கேள்விஎழுந்தது.மின் நிலைய பராமரிப்பு பணிகளை அனுபவமில்லாத பணியாளர்களிடம் ஒப்படைப்பது ஆபத்தானது என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மின்தடைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்து துணை மின்நிலையங்களைதனியார்மயமாக்கும் உத்தரவை திரும்பப்பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலமாகவே அதிமுக அரசின் தவறான போக்கை தடுக்க முடியும். 
 

;