headlines

img

இளைத்துக் கிடக்கும் இந்தியா...

நாட்டில் கடந்தாண்டு நவம்பர் வரை தீவிர  ஊட்டச்சத்து குறைபாட்டால் 9.27 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இந்தியாவில் ஆறு மாதங்கள் முதல் ஆறுவயது வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால்பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் விபரங்களைமத்திய மகளிர் - குழந்தைகள் நல மேம்பாட்டுஅமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படிகடந்தாண்டு நவம்பர் வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் 9,27,606 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், குஜராத் இரண்டாமிடத்திலும், சத்தீஷ்கர் மூன்றாமிடத்திலும், தமிழகம் நான்காமிடத்திலும், ஆந்திரம் ஐந்தாமிடத்திலும், தெலுங்கானா ஆறாமிடத்திலும் உள்ளன. கொரோனா மூன்றாவது அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறார்களின்ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவர்களது நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.

இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் உயரத்திற்கேற்ப எடை கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். அதைவிட ஆபத்தான விசயம், ஏதாவது நோய்த்தொற்று ஏற்படுமானால் உயிரிழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.கோவிட் 19 தொற்று நோய் பரவல் காரணமாகநாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்குநடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட உணவுக்கே பெரும் அல்லல்படும் நிலைஉள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சிறார்களே. இதில் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமானது. 

தொடர்ந்து கல்விக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதிய உணவுக்கு பள்ளிகளைச் சார்ந்திருந்தபிள்ளைகள் அந்த வாய்ப்பையும் இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனையை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி தலையிடவேண்டும். கொரோனா நோய்த் தொற்றின் கொடுமை காரணமாக உயிரிழப்புகள், வாழ்வாதாரம் பாதிப்பு என்பது ஒருபுறமிருக்க, ஒரு தலைமுறையே ஊட்டச்சத்து இல்லாததாக மாறும்ஆபத்து உள்ளது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் சாப்பிடும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய குழந்தைகள் அதிகமாக உள்ளபகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.தேசத்தின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளி விபரங்களில் இல்லை. ஆரோக்கியமான சிறார்களின் சமச்சீரான வளர்ச்சியில்தான் உள்ளது.