கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பெரியளவு அதிர்ச்சி தோல்வி அரங்கேறாத நிலையில், 2-வது சுற்று சற்று மாறுபாடுடன் நகர்ந்து வருகிறது. அதாவது காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் போன்று 2-வது சுற்றின் ஒவ்வொரு ஆட்டங்களும் 3 செட்கள் வரை நீள்கிறது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மன அழுத்தம் மற்றும் உடல்நல பிரச்சனைகளால் டென்னிஸ் விளையாட்டில் இருந்து தற்காலிக ஓய்வு அறிவித்திருந்த ஜப்பானின் ஒசாகா (24) நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கினார். டென்னிஸ் நட்சத்திரங்களின் தனிப்பட்ட தற்காலிக ஓய்வுக்கு பிறகு அவர்களது ஆட்டத்திறன் சற்று மாறுபடும். ஆனால் ஒசாகாவின் ஆட்டம் மாறாமல் வழக்கமான அதிரடியை கையிலெடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை மிரட்டி வருகிறார். முதல் சுற்றில் கொலம்பியாவின் கேமிலாவை 6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்திய ஒசாகா, 2-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை மெடிசனை 6-0,6-4 என்ற செட் கணக்கில் புரட்டி எடுத்தார். 21-ஆம் தேதி நடைபெறும் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை அனிஷிமோவாவை எதிர் கொள்கிறார். ஒசாகா திடீரென அதிரடி பார்ம் கியரை இயக்கி வருவதால் முன்னணி வீராங் கனைகள் அதிர்ந்து வருகின்றனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு களின் 2-வது சுற்றில் முக்கிய நட்சத்திரங்கள் தோல்வியை சந்திக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். (மாலை 5 மணி நிலவரம்)
இளசுகளை கண்டால் மிரளும் டாப் நட்சத்திரங்கள்
டென்னிஸ் விளையாட்டில் பொதுவாக இந்த நட்சத்திர வீரர்-வீராங்கனைகள் நன்றாக விளையாடுவார்கள் என எடுத்துக்கொண்டால் அவரை எதிர்த்து விளையாடும் நபர்கள் புதுமுகமோ அல்லது சற்று கத்துக்குட்டி வீரர் - வீராங்கனைகளாகவோ இருந்தால் கண்டிப்பாக பிரபல நட்சத்திர நபர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இது தான் வாடிக்கையான விஷயம். ஆனால் தற்போதைய நவீன விளையாட்டு உலகில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. காரணம் புதிதாக களமிறங்கும் வீரர்-வீராங்கனைகள் தங்களது வித்தியாசமான அதிரடி பாணியால் எதிர்த்து விளையாடும் நபர் யாராக இருந்தால் என்ன? நட்சத்திரமாக இருந்தால் என்ன? என ஒரு கை பார்த்து புரட்டியெடுத்து விடுகிறார்கள். கடந்த ஆண்டு டென்னிஸ் உலகில் கத்துக்குட்டிகளின் கைவரிசை சற்று ஓங்கியது. இதனால் தான் நன்கு அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் கூட சாதாரண கத்துக்குட்டிகளிடம் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். இதற்கு ஆதாரம் தற்போதைய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தான். 2-ஆம் சுற்றில் கூட சில முன்னணி வீரர்கள் திக்கி திணறித்தான் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.