இந்திய அணியிடமும் தோல்வி
உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது பாகிஸ்தான்?
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் டி-20 தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி நசீம் ஷா (3 விக்கெட்டுகள்), அமீர் (2 விக்கெட்டுகள்) வேகத்தை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 120 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பும்ரா (3 விக்கெட்டுகள்), பாண்டியா (2 விக்கெட்டுகள்) வேகத்தை சமாளிக்க முடியாமல் விரைவாக மிடில் ஆர்டரை இழந்தது. மேலும் பந்துகள் அதிகமாக வீணடிக்கப்பட்ட தால் பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இந்திய வீரர் அர்ஷதீப் சிங் கட்டுக்கோப்பாக வீசிய நிலையில், பாகிஸ்தான் அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இந்திய அணி திரில் வெற்றியை ருசித்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
பரிதாப நிலையில் பாகிஸ்தான்
2009இல் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணியான பாகிஸ்தான் அணி நடப்பு சீசனில் மிக மோசமான அளவில் திணறி வருகிறது. பயிற்சி ஆட்டங்களில் சொதப்பியது போலவே லீக் ஆட்டங்களிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் இளம் அணியான அமெரிக்காவிடம் அடி வாங்கியது போல, இந்திய அணியிடமும் மண்ணை கவ்வியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இன்னும் இரண்டு லீக் ஆட்டங்களே உள்ள நிலையில், இரண்டு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே அந்த அணியின் “சூப்பர் 8” சுற்று பற்றி கனவு கூட காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுத நஷீம் ஷா
பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரரான நசீம் ஷா கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 4 பந்துகளில் 10 ரன்கள் குவித்தார். ஆனால் போதுமான அளவில் பந்துகள் இல்லாத காரணத்தினால் நசீம் ஷாவின் அதிரடி வீணான நிலையில், போட்டி முடிந்த பின்பு நசீம் ஷா தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுதார். இதனை கண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நசீம் ஷா முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.
இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் - கனடா
இடம் : நியூயார்க்,
அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஹாட் ஸ்டார் (ஒடிடி)