games

img

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு – ஹர்பஜன் சிங்  

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.  

கிரிக்கெட் உலகின் பிரபல சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டை விட்டு நான் விடைபெறுகிறேன். கடந்த 23 வருடங்களாக என்னுடைய கிரிக்கெட் பயணத்தை அழகாகவும் நல்ல நினைவுகளாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.  

பஞ்சாபைச் சேர்ந்த 41 வயதான ஹர்பஜன் சிங், இந்திய தேசிய அணிக்காக 1998 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும், 28 சர்வதேச டி-20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

ஹர்பஜன் சிங், பேட்டிங்கில் சுமாராக செயல்படக்கூடியவர் என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் செய்து அசத்தியவர். 163 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியபோது தமிழ் மொழியை போற்றி புகழ்ந்ததால் தமிழ்நாடு ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை "கிரிக்கெட்டின் தமிழ் புலவர்" என அழைக்கின்றனர். இவர் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் ஒரு சீசனில் மும்பை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமின்றி தமிழில் "பிரண்ட்ஷிப்" என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;