இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. இந்த 2 லீக் ஆட்டத்தில், முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகளும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன. அதன்பிறகு மே 21 அன்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், ஞாயிறன்று நடைபெறும் 2 ஆட்டங்களும் பெரியளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் கிடையாது. அதாவது பிளே ஆப் சுற்று முன்னேற்றம் தொடர்பாக இந்த 2 ஆட்டங்களும் எவ்வித பலனையும் ஏற்படுத்தாது என்றாலும், தரவரிசையில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படலாம்
ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மட்டுமே, ஹைதராபாத் அணி 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும். அதே போல ராஜஸ்தான் அணியை கொல்கத்தா வீழ்த்தினால், கொல்கத்தா 21 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கும். கொல்கத்தா அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தினால், ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலேயே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோதல் பதற்றத்தை ஏற்படுத்திய சச்சின் மகன்
“17ஆவது ஐபிஎல் சீசன்”, “அமைதியான சீசன்” என்ற பெயர் கிடைக்கும் தருவாயில் மும்பை அணி வீரரும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகனுமான அர்ஜுன் தெண்டுல்கர் லக்னோ அணிக்கெதிரான ஆட்டத்தின் பொழுது கடைசி நேரத்தில் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நடப்பு சீசனில் கடைசி ஆட்டத்தில் மட்டும் கள மிறங்கிய அர்ஜுன் தெண்டுல்கர், லக்னோ வீரர் ஸ்டோய்னிஸை வம்புக்கு இழுத்தார். அதாவது அர்ஜுன் தெண்டுல்கர் வீசிய பந்தை ஸ்டோய்னிஸ் நேராக தட்டிவிட, மீண்டும் அர்ஜுனை நோக்கியே பாய்ந்தது. பந்தை பிடித்த அர்ஜுன், ரன் அவுட் செய்கிறேன் என்ற பெயரில் ஆக்ரோ ஷமாக பந்தை அவரை நோக்கி எரியும் முனைப்பில் ஆக்சன் காண்பித்தார். ஆனால் எறியவில்லை. அர்ஜுனின் மிரட்டலுக்கு ஸ்டோய்னிஸ் பயந்து ஒதுங்காமல் அப்படியே சிலை மாதிரி நின்றார். ஆனால் இந்த ஆக்சன் சம்பவத்தால் மைதானம் அமைதி கலந்த பதற்றமான சூழலை எதிர்கொண்ட நிலையில், ஸ்டோய்னிஸ் புன்னகையுடன் அர்ஜுன் தெண்டுல்கரின் மிரட்டலை சமாளித்ததால் மோதல் தவிர்க்கப்பட்டது.
மீண்டும் அடுத்த ஓவரில் அர்ஜுன் கபடி விளையாட்டு பதிலடி வேலையான “காலடி” ஆக்சனை ஸ்டோய்னிஸை நோக்கி காண்பித்தார். இதையும் ஸ்டோய்னிஸ் பெரிதாக பொருட் படுத்தவில்லை.
ஹைதராபாத் - பஞ்சாப்
(69ஆவது ஆட்டம்)
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
ராஜஸ்தான் - கொல்கத்தா
(70ஆவது ஆட்டம்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : கவுகாத்தி மைதானம், அசாம்