மிரட்டும் வேகம் மிரளும் எதிரணிகள்
இன்றைய ஆட்டங்கள்
பாகிஸ்தான் - இலங்கை
நேரம் : காலை 10:30 மணி
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
13-ஆவது சீசன் உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் அணி ஓரளவு சுமாரான ஆட்டத்தையும், அதிர்ச்சி தரும் அணிகளாக ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் வலம் வரும் நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் உலகக்கோப்பையில் பயிற்சி பெற்று வருகின்றன. அசத்தலான பார்மில் உள்ள இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. இந்திய அணி பிரம்மாண்ட பேட்டிங் பலத்துடன் இருந்தாலும், பந்துவீச்சில் அசூர பலத்தில் மிரட்டி வருகிறது. முக்கியமாக இந்திய மிரட்டல் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது புயல் வேகத்தால் எதிரணிகளை சின்னாபின்னமாக்கி வருகிறார். முதல் 4 ஆட்டங்களில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார் ஷமி, அணிக்குள் காயம் காரணமாக குழப்பம் ஏற்பட நியூஸிலாந்து அணிக்கெதிரான 5-ஆவது லீக் ஆட்டத்தில் ஷமியை களமிறக்கியது இந்திய அணி நிர்வாகம். என்ன சிந்தனையில் களமிறங்கினாரோ தெரியவில்லை, நியூஸிலாந்து அணியை தனது மிரட்டல் வேகத்தால் புரட்டியெடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பிறகு 6-ஆவது லீக் ஆட்டத்தில் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சின்னாபின்னமாக்கினார். தொடர்ந்து வியாழனன்று நடைபெற்ற 7-ஆவது லீக் ஆட்டத்தில் 5 ஓவர்கள் வீசி, 1 மெய்டன், 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் மிடில் ஆர்டரை தரைமட்டமாக்கி, இலங்கை அணியை 55 ரன்களில் சுருட்ட பேருதவி செய்தார். இந்திய அணி மொத்தம் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஷமி விளையாடிய 3 ஆட்டங்களால் கிடைத்த வெற்றி மிக பிரம்மாண்டமானது ஆகும்.