இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (நாக்பூர்) இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது ஆட்டம் தில்லியில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி யது. கடந்த டெஸ்ட் போட்டியை போன்று இல்லாமல் தொடக்க வீரர் காவஜாவின் (81) சிறப்பான ஆட்டத்தால் சற்று நிதானமாக ஆஸ்திரேலியா ரன் குவிக்க தொடங்கி யது. காவஜா நன்றாக விளையாடினாலும், ஷமியின் வேகம், இந்திய சுழல் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜா ஆகியோ ரின் அபார பந்துவீச்சால் திக்கு திணறிய ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் 167 ரன்களில் (6 விக்.,) சரிந்தது. பின்வரிசை வீரர்களான ஹேண்ட்ஸ்கோம்ப் (72), கேப்டன் கம்மின்ஸ் (33) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களுக்கு 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்
ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?
தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வரும் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடுகட்டத்தை தாண்டியுள்ள நிலையில், குரூப் “பி” இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் பலமான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் தோல்வியை எதிர்கொள்ளாமல் வெற்றிநடையுடன் வலம் வருகிறது. இதனால் ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? முதல் தோல்வி யாருக்கு? என்ற நிலை இருப்பதால் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 14-வது லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
இந்தியா - இங்கிலாந்து (14-வது லீக்)
நேரம் : மாலை 6:30 மணி
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா
(15-வது லீக்)
நேரம் : இரவு 10:30 மணி
இரண்டு ஆட்டங்களும் ஜார்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்