தூத்துக்குடி, மே 25- கோவில்பட்டியில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் காலிறுதி சுற்றுக்கு சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி, செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணிகள் தகுதி பெற்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி - ஒடிசா நிஸ்வாஸ் ஹாக்கி அணிகள் மோதின. இதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே - புனே மத்திய கலால் துறை அணிகள் மோதின. இதில் 3 - 1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னா் நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் சென்னை கலால் துறை அணி, பெங்களூா் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.