டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் தமிழக வீரர் மாரியப்பனுக்குப் பதில் தேக் சந்த் கொடி ஏந்துகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இதனைத் தொடர்ந்து டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணிக்குத் தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எனினும், தொடக்க நிகழ்ச்சியில் மாரியப்பனைக் கலந்து கொள்ளச் செய்ய வேண்டாம் என நிர்வாக கமிட்டி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதனால், தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் மாரியப்பனுக்குப் பதில் தேக் சந்த் இந்தியக் கொடியை ஏந்தி செல்கிறார். அவரைத் தவிர வினோத் குமார், ஜெய்தீப் குமார், சகினா காதுன் ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.