ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்தியப் பெண்கள் அணியின் கேப்டனாக சவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டோங்ஹாவில் டிசம்பர்) 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்தை டிசம்பர் 5 ஆம் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்தியப் பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோல் கீப்பர் சவிதா கேப்டனாகவும், தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான அணிக்குத் தேர்வாகி இருக்கும் லால்ரெம்சியாமி, ஷர்மிளா தேவி, சலிமா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவைச் சேர்ந்த நமிதா டோப்போ மற்றும் லிலிமா மின்ஸ் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் அணியில் இடம்பெற்றிருந்த நவ்நீத் கவுருடன் இரண்டு முறை ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கட்டாரியா முன்னிலை வகிக்கிறார். முன்கள வீரர்களான ராஜ்விந்தர் கவுர், மரியானா குஜூர் மற்றும் சோனிகா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், நடுகளத்தில் சுசீலா சானு புக்ரம்பம், நிஷா, மோனிகா, நேஹா, ஜோதி ஆகியோர் உள்ளனர். நவ்ஜோத் கவுர் மற்றும் இளம் வீராங்கனை சுமன் தேவி தௌதம் ஆகியோர் மாற்று வீராங்கனைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், காயம் ஏற்பட்டாலோ அல்லது 18 பேர் கொண்ட அணியில் உள்ள ஒருவர் கொரோனா தொற்று காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.