games

img

52 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பையைக் கைப்பற்றியது இத்தாலி

16வது ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின்  இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. இத்தாலியின் ரோம் நகரில் கடந்த மாதம் 11 ஆம் தேதியன்று தொடங்கிய 16வது யூரோ கால்பந்து போட்டி தொடரில் 24 நாடுகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முறையில் நடைபெற்ற இந்த தொடரில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இத்தாலி அணி ஸ்பெனையும், இங்கிலாந்து அணி டென்மார்க்கையும் வீழ்த்தின. 

இந்நிலையில், இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி பதில் கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. அதன்பின்னர் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இங்கிலாந்தின் கடைசி 2 பெனால்டி வாய்ப்பை இத்தாலி வீரர் டொனருமா அபாரமாகத் தடுக்க, அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு இந்திய மதிப்பில் 89 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.