மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி பெற்றுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை தொடரில் இன்று பே ஓவல் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இத்தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தனா 35 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் எடுத்தனர். 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சார்லி டீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி 1 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற புதிய சாதனையைப் இவர் படைத்துள்ளார். 2 ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பேட்ரிக் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்கிற பெருமையை ஜுலான் கோஸ்வாமி அடைந்தார். இந்நிலையில் இன்று இன்னொரு சாதனையைப் படைத்துள்ளார்.
39 வயது ஜுலான் கோஸ்வாமி இந்திய அணிக்காக 2002 முதல் விளையாடி வருகிறார். 12 டெஸ்டுகள், 199 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்திய அணிக்காக 275க்கும் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 1 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 4 ஆட்டங்களில் இரு தோல்வி, இரு வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.