டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
7-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் இந்த பேட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டி துபாய் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் பேட்டியில் ஓரளவுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 70 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அபுதாபி மைதானத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த போட்டியின் போது ஸ்டேடியத்தில் குறைந்தபட்சம் 25000 ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.