games

img

விளையாட்டு...

ஷ்ரேயாஸுக்கு சிறந்த  சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அதன்படி மார்ச் மாத சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார். ஷ்ரேயாஸ் சமீபத்தில் நிறைவு பெற்ற மினி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 243 ரன்கள் குவித்தார். மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். குறிப்பாக சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூஸிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் புழுதியுடன் ஆடுகளம் : திணறிய வீரர்கள்

நூற்றாண்டுகால பழமையான மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் ரோகேப்ரன் கேப் மார்டின் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவருக்கு மட்டும் நடைபெறும் இந்த தொடரின் 118ஆவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லோரென்ஸோ முஸெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.அதே போல இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் கிளாஸ்பூல் - ஜூலியன் ஜோடியை வீழ்த்தி, மோனாகோவின் ரோமைன் - பிரான்சின் மேனுவல் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.  ஆனால் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் நிர்வாகம் தயாரித்த களி மண் ஆடுகளம் அதிகளவு புழுதியுடன் காணப்பட்டது. வீரர்கள் ஓட கூட முடியாமல் கடுமையாக திணறினர். லேசாக காற்று அடித்தால் கூட ஆடு களத்தில் அசவுகரியமான சூழல் ஏற்பட்டது.  எனினும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஒத்திகைக்காக மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் நடத்தப்படுவதால் வீரர்கள் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மே மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்கி பெர்குசனுக்கு பலத்த காயம்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லோக்கி பெர்குசன் (33) ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.  ஓரளவு சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவி புரிந்து வரும் பெர்குசனுக்கு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அதிதீவிர பாதிப்பாக மாறியுள்ளதாகவும், இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பெர்குசன் விலகுவதாக பஞ்சாப் அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கூறுகையில்,”லோக்கி பெர்குசனுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரிலிருந்து அவர் விலகுகிறார். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்” என அவர் கூறினார்.

இன்றைய  ஆட்டம்

தில்லி - ராஜஸ்தான்

நேரம் : 7:30 மணி இடம் : ஜெட்லீ  மைதானம், தில்லி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)