games

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்!  

ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்கள் கடந்து ஷிகர் தவான் புதிய சாதனையை படைத்துள்ளார்.  

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இந்த போட்டி 200ஆவது ஐபிஎல் போட்டியாகும்.    

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.      

அடுத்து ஆடிய சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அம்பதி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.    

இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான்  199 இன்னிங்சில் 6086 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.      

ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2ஆவது வீரர் ஷிகர் தவான் ஆவார். விராட் கோலி 207 இன்னிங்சில் 6,402 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.    

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா (5,764), டேவிட் வார்னர் (5,668), ரெய்னா (5,528) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.