தொடர்ந்து 4 தோல்விகளை கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து வெற்றிகளைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் இன்று பலப்பரீட்சை செய்கிறது.
ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. சென்னை அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஒருவேளை இந்த ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியுற்றால், அது அந்த அணிக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 5வது தொடர் தோல்வியாக அமைந்துவிடும்.
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியுற்ற போதிலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் இந்த சீசனின் பலமான அணிகளாகக் கருதப்படும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளையும், மும்பை அணியையும் வீழ்த்தியுள்ளது. தற்போது ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்து தொடரும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொள்ள போகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.