புதிய உலக சாதனை
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, மிகக்குறைந்த போட்டிகளில் 900 கோல்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். ஏற்கெனவே கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக் கல் தேசிய அணியின் கேப்டன்) 900 கோல்கள் இலக்கை எட்டியிருந்த நிலையில், தற்போது மெஸ்ஸி அந்தப் பட்டிய லில் இணைந்ததுடன், ரொனால்டோவின் சாதனையையும் முறியடித்துள்ளார். ரொனால்டோ 1,236 போட்டிகளில் 900 கோல்கள் (சாதனை படைத்த வயது - 39 ஆண்டுகள், 213 நாட்கள்) அடித்தார். ஆனால் மெஸ்ஸி 1,142 போட்டிகளிலேயே இந்த 900 கோல்களை (சாதனை படைத்த வயது - 38 ஆண்டுகள், 268 நாட்கள்) அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது மெஸ்ஸி, ரொனால்டோ வை விட 94 போட்டிகள் முன்ன தாகவே இந்த மைல்கல்லை எட்டி ‘அதிவேகமாக 900 கோல்கள்’ அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘கான்காகேப் (CONCACAF)’ சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 சுற்றில், நாஷ்வெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்ந்தது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலேயே, எதிரணி வீரர்கள் சூழ்ந்திருந்த போதிலும், மிகக் குறுகிய இடத்தைப் பயன்படுத்தி மெஸ்ஸி அடித்த அந்த கோல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸியின் கோல் கணக்கு (அணிகள் வாரியாக) பார்சிலோனா (ஸ்பெயின் கிளப்) : 672 கோல்கள் அர்ஜெண்டினா (தேசிய அணி) : 115 கோல்கள் இன்டர் மியாமி (அமெரிக்க கிளப்-தற்போது வரை) : 81 கோல்கள் பிஎஸ்ஜி (பிரான்ஸ் கிளப்) : 32 கோல்கள்
ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ?
19ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ‘பேண்டஸி சேலஞ்ச் (Fantasy Challenge)’ என்னும் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் சூதாட்டப் பிரிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொடங்க உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. ஐபிஎல் தொடரை ரசிகர்களிடையே இன்னும் நெருக்க மாகக் கொண்டு செல்லும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் “ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை மசோதா” (Promotion and Regulation of Online Gaming Bill) நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ட்ரீம் 11, ரம்மி உள்ளிட்ட பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்த தடை நிலுவை யில் உள்ள நிலையில், திடீரென பேண்டஸி சேலஞ்ச் பிரிவை ஐபிஎல் தொடரில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
