டி20 போட்டியில் ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்படுவாரா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், ரோகித் ஷர்மாவை நீக்கிவிட்டு நல்ல ஃபார்மில் உள்ள இஷான் கிஷானை அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத கோலி, அதற்கு ஷாக் ரியாக்ஷன் கொடுத்ததோடு நீங்கள் உண்மையாகத்தான் கேட்கிறீர்களா? டி-20 போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? எனக் கேட்டுச் சிரித்தார். மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதனை தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அதற்கு ஏற்றாற்போல் பதில் அளிக்க வசதியாக இருக்கும் என்று கூறி செய்தியாளருக்குப் பதிலடி கொடுத்தார்.
கோலியின் இந்த பதிலுடன் கூடிய வீடியோ மற்றும் அவரது கிண்டலான, ஷாக் ரியாக்ஷன் போன்ற புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.